மீனவர்கள் முல்லைத்தீவு கடலுக்கு செல்லவதற்கு அச்சமடைந்துள்ளதாக தெரிவிப்பு

10229 0

கடற்தொழிலாளர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளமையால் கடலுக்கு செல்வதில் கடற்தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.மரியராசா தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் முல்லைத்தீவு கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளர்களின் படகொன்றின் மீது கடற்படையின் படகு வேண்டுமென்றே மோதியதில் படகு சிறிது சேதமடைந்த நிலையில் அப்படகில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக உயிர்தப்பியுள்ளனர்.

ஏற்கனவே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளர்கள் தாம் மீன்பிடிப்பதை கடற்படையினருக்கு தெரியப்படுத்தியதாகவும் எனினும் வேண்டுமென்றே வேகமாக விசைப்படகை செலுத்தி கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் கடற்படையினர் கடற்தொழிலாளர்களின் படகிற்கு அருகில் வேகமாக வருவதும் அச்சமூட்டும் வகையில் படகுகளை செலுத்துவது தொடர்பிலும் கடற்தொழிலாளர்கள் தமது சமாசத்திற்கு முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதாகவும் சமாசத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடற்படையினரே தாக்குதலை நடத்திவிட்டு வேகமாகச் சென்றிருப்பது கடற்தொழிலாளர்கள் மத்தியில் அச்சநிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment