காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்க வேண்டியது கட்டாயமானது-ரணில்

325 0
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்கக்கூடிய செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேவை ஏற்படின், காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக தென்னாப்பிரிக்காவைத் தழுவிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் நியமிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலக சட்டமூலம் குறித்த விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தைக் கூறினார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதை குலப்பும் நோக்கிலேயே சில இனவாத சக்திகள், சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக திருத்தம் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.
இனங்களுக்கிடையிலான வன்முறை சம்பவங்களே மக்கள் காணாமல் போனமைக்கான காரணம் என ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா சுட்டிக்காட்டினார்.
சுயாட்சியை பற்றியும் சமஸ்டியை பற்றியும் வடக்கில் சிந்திக்கின்ற போது அவை தெற்கில் பிரிவினைவாதமாக பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹூரூப் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்திடம் இருந்து நட்டயீட்டை எதிர்ப்பார்க்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய எதிகட்சித் தலைவர் இரா.சம்பந்தன், காணாமல் போனோர் விடயம் தொடர்பான செயற்பாடுகளில் அரசாங்கம் காட்டுகின்ற தாமதம் குறித்து மிகுந்த அதிருப்தி கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் விடயத்தில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பிரதமர், ஜனாதிபதி என்று பல்வேறு தரப்புக்களுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் மாத்திரம் அன்றி, பாதுகாப்பு தரப்பில் காணாமல் போனோர் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்த விடயத்தில் தாமதம் காட்டுகின்றமையானது தற்போதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று சம்பந்தன் கூறினார்.
எவ்வாறாயினும், காணாமல் போனோர் அலுவலகமானது, தண்டனை வழங்குதல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளாது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரசிங்க, அது காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்கும் செயற்பாட்டினையே மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தை பல்வேறு கோணங்களில் நெருங்க வேண்டும்.
இந்த பிரச்சினையை நிறைவு செய்யும் வகையில், தீர்வு வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்குதல், நிருவகித்தல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான திருத்தப்பட்ட சட்ட மூலம் நேற்று நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் எவையும் இன்றி நிறைவேற்றப்பட்டது.

Leave a comment