மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும்

383 0

நாட்டில் நிலவிய போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் துரிதப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுத்தார்.

மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு மென்மேலும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

வெடிபொருள் அபாயக்குறைப்பை அண்மித்த மாவட்டத்தை பிரகடனப்படுததும் முதல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர்,

தற்போது அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து எமது மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் தற்போது மட்டக்களப்பு மாவட்டம் வெடிப்பொருள் அபாயக்குறைப்பை அண்மித்த மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்னும் ஒரு சில பகுதிகளில் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகள் உள்ளன. அவையும் விரைவில் அடையாளங்காணப்பட்டு முற்றிலும் வெடிபொருட்கள் அற்ற மாவட்டமாக மாவட்டம் மாற்றப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதனின் சிறப்பான செயற்பாட்டின் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது மக்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்பும் பயணத்தில் சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்குகின்ற போதும் மென்மேலும் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வினைக் கட்டியெழுப்ப திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதன் ஊடாக எமது மக்களின் வாழ்க்கையை முழுமையான இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும் என நம்புகின்றேன்.

பௌதீக ரீதியாக எமது மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போல இந்த நாட்டின் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சமூகங்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முரண்பாடுகள் களையப்பட வேண்டும். இதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நம் நாட்டில் சகல இனங்களும் சந்தேகங்கள் மற்றும் அச்சங்கள் இன்றி வாழக் கூடிய சூழல் ஏற்படும்.

ஆகவே இந்த மனிதாபிமான செயற்பாட்டில் எமக்கு கரம் கொடுத்த அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

Leave a comment