நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப்பதவி எனக்குத் தேவையற்றது!

301 0

“நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில், எனது ஆலோசனைகளுக்கும் எனது மனிதாபிமானச் செயலுக்கும் மதிப்பளிக்கவில்லை என்றால், அவ்வாறானதொரு பதவி எனக்குத் தேவையே இல்லை. அதனால், அப்பதவியைத் துறக்க, நான் தயார்” என்று  தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான்,தனது இராஜினாமாக் கடிதத்தை, உரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள செய்திக் குறிப்பில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“ஹட்டன் குப்பை விவகாரத்தில், நுவரெலியா பிரதேச சபை, பூரண ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால், மக்களுக்கு சேவைசெய்ய முன்வராத நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப்பதவி எனக்குத் தேவையற்றதாகும். ஆகையால், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பதவியை இராஜினாமா செய்கின்றேன். ஆகவே, ஏனைய மலையக அரசியல்வாதிகள் போன்று, கீழ்த்தரமான அரசியல்வாதியாக இருக்க நான் விரும்பவில்லை.

“மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே, அவர்கள் எனக்கு வாக்களித்தார்கள். எமது நோக்கமும் மக்களின் சேவைகளை பூர்த்தி செய்யவேண்டியதாகவே இருக்க வேண்டும். ஹட்டன் நகரமே, இன்று நரகமாகக் காட்சியளிக்கின்றது. ஹட்டன் நகரில் வசிக்கின்றவர்களும், எமது இரத்தச் சொந்தங்களே தவிர, மாற்று நாட்டவர்களோ வேற்று கிரகவாசிகளோ அல்லர். குப்பைகளை அகற்றும் விவகாரத்தில் கூட ஒற்றுமை இல்லாமல் அரசியல் இலாபம் தேடும் அமைச்சர்கள், எம் இனத்துக்கு அச்சுறுத்தல் வரும் போது எப்படி முன்வருவார்கள்?

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், என்றும் மக்கள் நலனுக்கான திட்டங்களை வகுக்கும்போது, அவற்றை யார் தடுத்தாலும் தயங்காது சிறப்புரச் சேவையை செய்து முடிக்கும். பத்தனை பகுதியில் ஹட்டன் குப்பைகளைப் போட வேண்டாம் என சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதற்கு, நுவரெலியா பிரதேச சபையும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இதனால், இ.தொ.காவுக்குச் சொந்தமான கொட்டகலை காங்கிரஸ் தொழிநுட்ப நிறுவன வாளாகத்தின் ஒதுக்குப்புறத்தில், அந்தக் குப்பைகள் கொட்டப்படும்” என்று, அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment