போயஸ் கார்டனுக்குள் மீண்டும் நுழைவேன்: தீபா பேட்டி

211 0

ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் சட்டப்படி மீட்பேன். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மீண்டும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைவேன் என தீபா பேட்டியளித்துள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளருமான ஜெ.தீபா சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் சட்டப்படி மீட்பேன். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மீண்டும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைவேன். சட்டப்படி இதனை செய்வேன்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு போயஸ் கார்டனுக்குள் நான் நுழைந்தபோது வீட்டு சாவியை கேட்டேன். அதற்கு தனியார் காவலாளிகள் வீட்டு சாவி எங்களிடம் இல்லை. யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை என்று கூறினார்கள். கதவு அருகில் சென்று பார்த்தபோது உள்புறம் பூட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.

சற்று நேரத்தில் அங்கு வேலை செய்து வரும் ராஜம்மாள் என்ற பெண் கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்.

அப்போது பக்கத்து அறையில் இருந்த சசிகலாவின் புகைப்படத்தை வெளியில் எடுத்து போட முயன்றேன். திடீரென்று திபுதிபுவென்று குண்டர்கள் சிலர் வெளியே ஓடி வந்தனர்.

போயஸ் கார்டனில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. போயஸ் கார்டனில் நடப்பதெல்லாம் மர்மமாக உள்ளது.

போயஸ் கார்டனில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச முறையாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அவருடைய அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.அவர் என்னை சந்திப்பார் என்று நிச்சயம் நம்புகிறேன். பிரதமரை சந்திக்கும் போது போயஸ் கார்டனில் என்ன நடக்கிறது என்பது பற்றி விசாரணை கமி‌ஷன் அமைக்க வலியுறுத்துவேன்.

உண்மையான அ.திமு.க. நாங்கள்தான். 1½ கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குதான் உள்ளது. நிர்வாகிகள், பதவியில் இருப்பவர்களின் ஆதரவு மட்டுமே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.அ.தி.மு.க.வையும், சின்னத்தையும் கைப்பற்றி தொண்டர்களை வழி நடத்துவேன். ஜெயலலிதா இடத்துக்கு நான் வர வேண்டும். கட்சியை வழி நடத்த வேண்டும் என தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதற்காக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளேன். கால அவகாசம் அளித்தால் இன்னும் 2 லட்சம் பிரமாண பத்திரங்களை எங்களால் தாக்கல் செய்ய முடியும். ஜெயலலிதா பேரவை போல அ.தி.மு.க.வின் துணை அமைப்பாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment