அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள்: குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம்

239 0

அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று குடும்பத்தினரிடம் சசிகலா வலியுறுத்தி உள்ளார். இதற்காகத்தான் தினகரனை மீண்டும் அழைத்து சசிகலா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, அவரது அண்ணி இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கணவர் நடராஜன், அக்காள் மகன்கள் தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குகள் உள்ளன. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்து வந்தாலும் தினகரனை சந்திக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், 4-க்கும் மேற்பட்ட எம்.பிக்களும் தினகரனை சந்தித்துள்ளனர்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணி போல தினகரன் செயல்படுகிறார். 2 அணிகளும் இணைய வேண்டும் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் அறிக்கை விடுத்து இருந்தார்.

ஆனால் இதை தினகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது கூட நடராஜனுக்கு தெரியவில்லை என்று தினகரன் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.

இவர்கள் 2 பேருடைய கருத்தும் குடும்பத்தில் மோதல் இருந்து வந்த சூழ்நிலையை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த தகவல்களை அறிந்த சசிகலா வருத்தம் அடைந்தார். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இதற்காகத்தான் தினகரனை மீண்டும் அழைத்து சசிகலா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சி மற்றும் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார் என்றும் குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்குகளில் உரிய வக்கீல்கள் மூலம் வாதாடி அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தினகரனுக்கு சசிகலா கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அவர் தனது உறவினர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

நமக்குள் சண்டை வேண்டாம், நாம் சண்டை போட்டால் பா.ஜனதாவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் லாபம். எனவே உங்கள் சண்டையை நிறுத்துங்கள்.இவ்வாறு அவர் கடிதம் எழுதி உள்ளதாக அ.தி.மு.க. அம்மா அணி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.சிறையில் உள்ள சசிகலாவை ஒருசில அமைச்சர்கள் மற்றும் எம்எல்.ஏ.க்கள் மட்டும் சந்தித்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தன்னை சந்திக்க வராதது குறித்து சசிகலா வருத்தம் அடைந்துள்ளார்.இதுபற்றி அவர் இளவரசியிடம் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Leave a comment