போயஸ் கார்டனில் இருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும்: தீபக்

229 0

போயஸ் கார்டனில் சசி அத்தையின் உறவினர்கள் உடைமைகள் இருந்தால், அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஒரு வாரப்பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார் அவர் கூறியதாவது:-

போயஸ் கார்டன் வீடு என் அத்தையின் உரிமையில்தான் இப்போதும் இருக்கிறது. இந்த வீடு பாட்டியும் (ஜெயலலிதாவின் தாயார் சந்தியா), அத்தையும் சேர்ந்து வாங்கியது. ‘நாட்டியக்கலா நிகேதன்’ என்ற அமைப்பில் என் அத்தையும், பாட்டியும் பங்குதாரர்கள். இந்த அமைப்பின் பெயரில் தான் போயஸ் வீடு வாங்கப்பட்டது. அதன்பிறகு அதில் செய்யப்பட்ட மாற்றங்கள், கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் எல்லாம் அத்தையின் சொந்த சம்பாத்தியத்தில்தான் நடந்தன.

1971-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பாட்டி, ‘நாட்டிய கலா நிகேதன்’ அமைப்பின் பெயரில் இருக்கும் சொத்துகளும், இந்த வீட்டின் முழு உரிமையும் அத்தைக்குத்தான் என்பதைத் தெளிவுபடுத்தி உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த ஆவணங்கள் தற்போது என்னிடம் உள்ளன.

அதன்பிறகு அத்தை இருக்கும்வரை, வேறு யாருக்கும் மாற்றி எழுதிக் கொடுக்கவில்லை. அப்படி அத்தை செய்திருந்தால் அது நிச்சயமாக சசி அத்தைக்குத் தெரிந்திருக்கும். இதுவரை சசி அத்தை அப்படி நடந்ததாகச் சொல்லவில்லை. மேலும் வேறு யாரும் அப்படி ஒரு உயில் இருக்கிறது என்று சொல்லி உரிமை கேட்டு வரவில்லை. வரவும் முடியாது. ஏனென்றால் என் அத்தை அப்படி ஒரு உயிலை எழுதவில்லை என்பதுதான் உண்மை.

அதனால், சட்டப்படி இந்த வீடு எனக்கும், தீபாவுக்கும் சொந்தமாகிறது. இந்த வீடு மட்டுமல்ல, ‘தன்னுடைய பெயரில் உள்ள சொத்துக்கள்’ என அத்தை எவற்றையெல்லாம் ஒப்புக்கொண்டு தன்னுடைய பிரமாணப் பத்திரங்கள் மூலம் நீதிமன்றங்களில் குறிப்பிட்டுள்ளாரோ அவை அனைத்தும் எங்களுக்கே சொந்தம். அதில் வேறு யாரும் எந்தப் பிரச்சினையும் செய்ய முடியாது.

சசி அத்தையும், அவர்களுடைய உறவினர்களும் இதுவரை எங்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. தற்போது போயஸ் கார்டன் வீட்டை நான்தான் பராமரித்து வருகிறேன். பூங்குன்றன்கூட இப்போது இங்கு வருவதில்லை. நந்தகுமார் என்பவரை வைத்து அந்த வீட்டின் தினப்படி வேலைகள் எப்போதும்போல் நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளேன்.

நான் அந்த வீட்டுக்கு எப்போது போனாலும் யாரும் என்னை அங்கு தடுப்பதும் இல்லை. வேறு எந்தப் பிரச்சினையும் செய்வதில்லை. அவர்களால் செய்யவும் முடியாது. ஒருவேளை சசி அத்தையின் உறவினர்கள் ஏதாவது பிரச்சினை செய்ய நினைத்தால், சசி அத்தையே அதைத் தடுத்து விடுவார். நடராசன் அங்கிளும் வேடிக்கை பார்க்க மாட்டார். இதெல்லாம் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

ஆனாலும், இதைத்தாண்டி அத்தையின் பெயரில் உள்ள சில சொத்துகள் தற்போது வேறு சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் தானாக முன்வந்து அவற்றை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். முதற்கட்டமாக போயஸ் கார்டன் வீட்டை முழுமையாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த வீட்டில் எங்களைத்தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அப்படி உரிமை உள்ளதாக நினைத்துக் கொண்டு, அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்து செல்லும் சசி அத்தையின் உறவினர்கள், இனிமேல் அது போன்ற செயல்களைக் கைவிட வேண்டும். அவர்களுடைய உடைமைகள் ஏதாவது இங்கே இருந்தால், அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும்.”

“போயஸ் வீட்டுக்கு நான் வரும் போது என்னை யாரும் தடுப்பதில்லை. எனக்குத் தொந்தரவுகள் கொடுப்பதில்லை. எனக்கு இருப்பதைப் போன்ற அந்த ஒரு பிடிமானம் என் அக்கா தீபாவுக்கும் இந்த வீட்டோடு இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அதனால் கடந்த 11-ந் தேதி நானே தொலைபேசியில் அழைத்து, தீபாவை வரச்சொன்னேன்.

அவர் வரும் போதே ராஜாவையும் அழைத்து வந்தார். அதன் பிறகு நானும் தீபாவும் அத்தையின் படத்துக்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தினோம். அங்கேயே சமைத்துச் சாப்பிட்டோம். அதுவரை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. திடீரென தீபா என்ன நினைத்தாரோ வீட்டுக்குள் இருந்த சசி அத்தையின் படம் உள்ளிட்ட மற்ற பொருட்களை அப்புறப்படுத்த முயன்றார்.

நான் அப்போது தலையிட்டு ‘அந்தப் பொருள்கள் நமக்கு உரிமையில்லாதவை. அவற்றை இப்போது தொடாதே! சசி அத்தை அல்லது அவரது உறவினர்கள் முன்னிலையில் வைத்து அவற்றைப் பொறுமையாக அப்புறப்படுத்தலாம்’ என்றேன்.

ஆனால், தீபா கேட் வில்லை. சசி அத்தையின் படத்தை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தார். அதன் பிறகுதான் சசி அத்தையின் செக்யூரிட்டிகள் வந்து பிரச்சனை செய்தனர்.

உடனே நான் தலையிட்டு தீபா, அவருடைய கணவர் மாதவன், தீபாவின் பாதுகாப்புக்காக வந்த ராஜா ஆகியோரை வெளியேற்றச்சொன்னேன். அதில் தீபாவுக்கு கோபம். அவர் என்னை சரமாரியாகத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கூச்சல் போட்டு ரகளை செய்துவிட்டார்”.

“நான் மட்டுமல்ல. அங்கிருந்த வேறு யாரும் ராஜாவையோ, மாதவனையோ, தீபாவையோ தாக்கவில்லை. அன்று நடந்தவை எல்லாம் உள்ளே இருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி உள்ளன. அவற்றைப் பார்த்தால் உண்மைகள் தெரியும்”.

“போயஸ் கார்டனில் நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை எதையும் சசி அத்தையிடம் இருந்து மறைக்க முடியாது. அவருக்கு உடனடியாகத் தகவல் தெரிந்துவிடும். நடந்தவற்றைக் கேள்விப்பட்ட அவர் என்னிடம், ‘போயஸ் கார்டன் வீட்டை அக்காவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அதற்காக நீ அந்த வீட்டை விட்டுக்கொடு’ என்று கேட்டார்.

அதற்குநான், நினைவு இல்லமாக மாற்றவோ அல்லது வேறு நல்ல காரியங்களுக்காகவோ என்றால், நான் இந்த வீட்டை நிச்சயமாக விட்டுத் தருவேன். ஆனால் உங்களைத் தவிர உங்களுடைய உறவினர்கள் யாராவது இந்த வீட்டை வேறு வழிகளில் ஆக்கிரமிக்கவோ, அபகரிக்கவோ நினைத்தால் அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று உறுதியாகத் தெரிவித்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment