வெள்ள நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மின்சார கட்டணங்களை அறவிடாதிருக்கவும் மின்மானிகள் மற்றும் மின் இணைப்புக்களை இலவசமாக பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள் புத்துருவாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் தெரிவித்தார்.
தற்போது மின்சாரம் வழங்கும் செயற்பாடுகளில் பெரிதும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் மின் கட்டமைப்புக்கள் மீள் திருத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இரத்தினபுரி மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு மின்சாரம் விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அங்கு மாத்திரமன்றி மாத்தறையில் 1 இலட்சத்து 26 பேருக்கும் காலியில் 40 ஆயிரம் பேருக்கும் மாத்தறையில் 40 ஆயிரம் பேருக்கும் மின்சாரம் விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின் இணைப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். எனின் 011 30 30 303 என்ற இலக்கத் திற்கு அழைத்து தமது முகவரிகளை அறிவித்தால் மின்சார சபையின் உடனடி செயற்பாட்டு குழுக்கள் விரைந்து மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் வீட்டிற்கு மின் மானிகளை இலவசமாக வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதிகளவிலான மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கின்றவர்களுக்கு 6 மாத கால சலுகையினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

