வவுனியா பொலிசார் பக்கச் சார்பாக செயற்படுவதாக தெரிவித்து ஒரு தாயும் மகனும்….(காணொளி)

506 0

வவுனியா, தாண்டிக்குளம், முதலாம் ஒழுங்கைப் பகுதியில் வசிக்கும் வாகன உரிமையாளர் ஒருவரின் தான்றோன்றித்தனமான செயலினால் அவ் ஒழுங்கையில் வசித்த பலருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ் ஒழுங்கையில் வசிக்கும் பலர் கடிதம் ஒன்றினை எழுதி வவுனியா நகரசபை, பிரதேச செயலாளர், போக்குவரத்து பொலிசார் ஆகியோருக்கு வழங்கியிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வாகன உரிமையாளரும் அவரது குழுவினரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்குள்ள வீடொன்றில் புகுந்து இளைஞர் ஒருவரை தாக்கியதுடன் மோட்டர் சைக்கிளையும் சேதமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அன்றையதினம் இரவு 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் தாக்குதலாளிகளை பொலிசார் அவர்களை நேற்று மாலைவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை வைத்தியசாலையில் இருந்து தாக்குதலுக்குள்ளானவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறப்பட்டதையடுத்து அவர்கள் தாக்குதலாளிகளை கைது செய்யாமையால் தாம் வீட்டிற்கு செல்ல முடியாது என வைத்தியசாலை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் பொலிஸார் இது குறித்து கவனம் செலுத்தாதமையினால் நேற்றிரவு தாயும் மகனும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு சென்று பொலிசாரின் அசமந்த செயற்பாடு மற்றும் தமது அச்ச நிலை தொடர்பாக, முறையிட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞனையையும், தாயாரையும் பொலிசாரின் வாகனத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இரவு அவர்களது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களை பொலிசார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.