எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததாலேயே உயிரிழப்பு- ராஜித

336 0

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் குறித்து அரசு முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அதை அலட்சியம் செய்ததனாலேயே பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேரிடர் முகாமைத்துவ நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியும் சமையலை முடித்துவிட்டு வெளியேற நினைத்த ஒரு குடும்பமும், தங்களுக்குச் சொந்தமான பொருட்களை மூட்டை கட்டுவதிலேயே முனைப்பாக இருந்த மற்றொரு குடும்பமும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதே உடனடியாக அவர்கள் வெளியேறியிருந்தால் அவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என்றும் கூறினார்.

இந்த இயற்கை அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவே இருந்தது என்று கூறிய அவர், பாரிய மழை வீழ்ச்சியையோ, அடுத்தடுத்து நிகழ்ந்த மண்சரிவுகளையோ எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் கூறினார்.