இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஹங்கேரியின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த திங்கட்கிழமை (26) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
ஹங்கேரி பிரதி சபாநாயகரை வரவேற்ற இலங்கை சபாநாயகர், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் காணப்படும் வலுவான உறவுகளையும் நினைவுகூர்ந்தார்.
குறிப்பாக இந்நாட்டின் வீதி அபிவிருத்தி மற்றும் நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள், GSP சலுகை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச மட்டங்களில் ஹங்கேரி வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
ஊழல் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரிக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் வலியுறுத்தினார். அத்துடன், இலங்கையில் காணப்படும் முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்கு ஹங்கேரி முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை எடுத்துரைத்த சபாநாயகர், கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் ஹங்கேரியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்த பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – ஹங்கேரி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஹங்கேரியின் பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை வலியுறுத்தினார். இலங்கையின் சுற்றுச்சூழல், இயற்கை அழகு, வளமான கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றையும் அவர் பாராட்டினார்.
திறந்த பாராளுமன்ற முறைமையை மேம்படுத்தல், பொதுமக்களுடனான இணைப்பை வலுப்படுத்தல் மற்றும் அனுபவங்கள், நல்ல நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளல் மற்றும் பாராளுமன்றங்களின் ஆய்வுக்கான திறன்ங்களை மேம்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் “INTER PARES” உலகளாவிய திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஹங்கேரி எதிர்பார்ப்பதாகவும் பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவம், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையே நேரடி விமானங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புக்கள் போன்ற விடயங்களையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
ஹங்கேரிக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அவர் இலங்கை சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார். இந்த விஜயத்தின் போது ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சுமுகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், செயற்கை நுண்ணறிவில் (AI) வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள் மற்றும் சவால்கள், இரு நாடுகளிலும் உள்ள அரசியல் கட்டமைப்புக்கள், மாணவர் பாராளுமன்றம் போன்ற மக்களுடனான இணைப்புக்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
இதேநேரம், ஹங்கேரி தூதுக் குழுவினருக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சருமான (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன மற்றும் இரு குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை திறம்பட எதிர்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், நெறிமுறை தரநிலைகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளை நிறுவுவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் திறன் பரிமாற்றத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஹங்கேரியின் பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா முன்மொழிந்தார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய சவால்களுக்கு பதிலளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் வலியுறுத்தியது. மேலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான தொழில்நுட்ப முன்னேற்றத்தை உறுதி செய்யும் அதே வேளையில், புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஹங்கேரி மற்றும் இலங்கை இடையேயான பரஸ்பர உறுதிப்பாடும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஹங்கேரிக்கான கென்சியூலர் ஷெவந்த ஹரேந்திர சுதாரக மென்டிஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் மரபுகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் ஹங்கேரி தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டார்.

