யாழ். மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை!

13 0

உலகளாவிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் சுற்றுலாத்துறை சார்ந்து பிரபல்யமாக அடையாளம் காணப்படுவதால் மாவட்டத்தினுடைய தொன்மையையும் சிறப்பம்சங்களையும் காட்சிப்படுத்தவும் பாதுகாக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்  என யாழ்ப்பாண மாவட்டத்தின்   பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான உப குழுவினுடைய தலைவருமான  பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா உபகுழுக் கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டத்தின்  பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான உப குழுவினுடைய தலைவருமான  பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில்  செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல்  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும், இதற்கு அமைவாக மாவட்டத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் ஊடாக தேசிய வருமானம் மற்றும் உள்ளூர் வருமானத்தை ஈட்டி கொள்ள முடியும் என்பதுடன் தொழில் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், யாழ். மாவட்டமானது சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் அதிக செல்வாக்கு செலுத்தப்படும் மாவட்டமாக காணப்படுவதாகவும், அமைச்சரவையில் இது தொடர்பாக பல ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தை முழுமையான சுற்றுலா தளங்களாக மாற்ற வேண்டும் என்றும், அண்மையில் உலகளாவிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் சுற்றுலாத்துறை சார்ந்து பிரபல்யமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தினுடைய தொன்மையையும் சிறப்பம்சங்களையும் இணையதளங்களில் காட்சிப்படுத்துமாறு  தெரிவித்ததுடன், மாவட்டத்தின் சிறப்பம்சங்களை உலகளாவிய ரீதியில் பிரபல்யப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  இதற்கான நடவடிக்கைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும்  வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர வேண்டும் எனவும், அதற்கான திட்டங்களை முன் வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், இதனூடாக அதிக சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாக  இருப்பதுடன் நமது  இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் இதற்கான காத்திரமான ஆலோசனைகளை அனைவரும் வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பில் காணப்படும் ஆளணி பற்றாக்குறைகளை பூர்த்தி செய்து சுற்றுலாத்துறையை மேலும் வினை திறனாக மேற்கொள்வதன் ஊடாக சுற்றுலா துறையை மேம்படுத்தலாம் என்றார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால்  திட்டங்களுக்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதேச  செயலக  ரீதியாக  முன்னெடுக்கப்படும் 9 திட்டங்களுக்கான அனுமதிகள் தொடர்பாகவும் இத் திட்டங்களின் அமுலாக்கலின் சாத்திய நிலைமைகள்  மற்றும் நிலையான தன்மை  போன்றவை  தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளுடைய  தவிசாளர்கள், வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலா பணியகத்தின் தலைவர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள்  சுற்றுலா துறை சார்ந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி சபைகளுடைய செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.