எங்களது போராட்டத்தை தொடர்ந்து நீடிக்கவிட்டு நல்லாட்சி அரசும் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்க்கின்றதா என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி

270 0

எங்களது போராட்டத்தை தொடர்ந்து நீடிக்கவிட்டு நல்லாட்சி அரசும் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்க்கின்றதா என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதிலை வழங்கக்கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் 98 வது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நூறாவது நாளான எதிர்வரும் 30ம் திகதி செவ்வாய்கிழமை சர்வமதப்பிரார்த்தனையொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த சர்வமத பிரார்த்தனையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் சிவில் சமுகப்பிரதிநிதிகள் சகலரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் எங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நாங்கள் கடந்த எட்டு வருடங்களாக பல போராட்டங்களை மேற்கொண்டு எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து இந்தப்போராட்டமானது 98வது நாட்களாக இன்றும்  முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எங்களுக்கான எந்த ஒரு தீர்வுகளும் வழங்காது எங்களது போராட்டங்களை தொடர்ந்து நீடிக்க விட்டு நல்லாட்சி அரசும் அரசியல் தலைமகளும் வேடிக்கை பார்க்கின்றதா எனக்கேள்வி எழுப்பியுள்ளனர்.