“அரசியலுக்கு புதிதாக வந்தவர்கள் பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்ல” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்தில் நடைபெற்ற மதிமுக கட்சி நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று பேசியது: “நடைபெற உள்ள 2026 தேர்தல் நமக்கு அக்னி பரீட்சை. அதனை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தேவையான செலவுகளை செய்யக் கூடியவர்கள் என்பதையெல்லாம் பார்த்துதான் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியும்.
எனவே, ஒவ்வொருவரும் நான்தான் வேட்பாளராக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் அதை தூக்கி எறியுங்கள். நமக்கு எத்தனை தொகுதி வழங்குவார்கள் என்பதும் தெரியாது. ஒரு சில கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தை யாரோ இயக்குகிறார்கள். மதிமுகவுக்கு அங்கீகாரமே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். அதை முன்கூட்டியே உணர்ந்து தனி சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன் என முடிவு செய்து நின்றதால்தான் நம் கட்சியை காப்பாற்ற முடிந்தது. அதற்கு முழு காரணம் துரை வைகோ.
தேர்தல் நேரத்தில் நான் யாருக்கெல்லாம் லட்சங்களை அள்ளிக் கொடுத்து உதவினேனோ அவர்கள் தான் மதிமுகவை அழித்து விடலாம் என என்னைப் பற்றி அவதூறு பரப்பினார்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் அழிக்க முடியாது. தேர்தல் நிதி வசூலிப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒரு காலத்தில் திமுகவுக்கு நான் தேர்தல் நிதி திரட்டும்போது நான் பட்ட சிரமம் எனக்கு நன்றாகவே தெரியும். இப்போது ஏராளமான நிதிகள் இருக்கின்றன. ஆனால் மதிமுகவிடம் அப்படி ஒரு நிலை இல்லை” என்றார்.
மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது திடிரென மைக் ஸ்டாண்ட் மூலம் எர்த் அடித்ததால் வைகோ தடுமாறினார். மேடையில் இருந்த அனைவரும் பதற்றத்தில் எழுந்தனர். சுதாரித்துக் கொண்ட வைகோ, ‘மின்சாரம் தாக்க முற்படுகிறது’ என தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், “அன்பு சகோதரர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலுக்குப் பின்னரும் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான ஆட்சியாக தொடர்வார். அதில் வெற்றியும் பெறுவார்” என்றார்.
அரசியலுக்கு நடிகர் விஜய் வந்தது குறித்து கேட்டபோது, “அரசியலுக்கு புதிதாக வந்தவர்கள் பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

