திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் பெற மார்க்சிஸ்ட் முயற்சி: பெ.சண்முகம் தகவல்

16 0

“திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு பெறப்படும். இதற்கான முயற்சிகளை பேச்சுவார்த்தை குழு மேற்கொள்ளும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நாமக்கல்லில் தொடங்கியது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி லாவண்யா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் லாவண்யா மதமாற்றம் செய்யப்படவில்லை. இதுமட்டுமன்றி இதற்கு முன்பாக பள்ளியில் படித்து வெளியேறிவர்கள் எவருமே மதமாற்றம் செய்யப்பட்டவில்லை என்ற தகவலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

எனவே, பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பகையை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், இப்பிரச்சினையை வைத்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக அண்ணாமலை மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2022-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு 500 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த 3 ஆண்டு காலமாக பராமரிப்பு தொகை உயர்த்தப்படவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்திய அளவில் மிகக் குறைவான பராமரிப்புத் தொகையை தமிழக அரசு வழங்கிறது. பராமரிப்புத் தொகையை உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை நள்ளிரவில் கைது செய்து அலைக்கழித்தது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். இதற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் துறையினர் நடவடிக்கைக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. பராமரிப்புத் தொகை உயர்த்துவதுதான் போராட்டத்தை சுமுகமாக முடிக்க காரணமாக அமையும். இதற்கு அரசு நடடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை குழுவில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதுபோல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் வெளியிடப்படக்கூடிய தேர்தல் அறிக்கை தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி, உறுப்பினர்களாக என்.குணசேகரன், டி.ரவீந்திரன், ஜி.சுகுமாறன், முத்துக்கண்ணன் ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வரும் தேர்தலை பொறுத்தவரை மாநில குழுவில் முடிவு செய்தபடி பாஜக, அதிமுக அணியை வரும் சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடிப்பது என்பதுதான் எங்களின் முதன்மையாக கடமை. அதற்குரிய முறையில் எங்களது தேர்தல் பணி அமையும். அதேவேளையில் சட்டப்பேரவையில் சிபிஎம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

அதற்கேற்ப போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட வேண்டும் என மாநில குழு முடிவு செய்துள்ளது. எனவே திமுகவின் பேச்சுவார்த்தைக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு கூடுதலான தொகுதிகளை பெறுவதற்கு குறிப்பாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை பேச்சுவார்த்தை குழு மேற்கொள்ளும். அதிகமான தொகுதிகளை மேற்கொள்வது என்பதுதான் எங்களின் எண்ணம்.

தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது எல்லாருக்கும் பொதுவானது என்பது போல் கடனும் பொதுவானது. தற்போது ஒன்பதரை லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இது அடுத்த ஆண்டு பத்தரை லட்சம் கோடியாக உயரும் என நிதியமைச்சர் அபாய சங்கை ஊதியுள்ளார்.

எனவே வளர்ச்சியில் பங்கு உள்ளது என்றால் கடனிலும் பங்குள்ளது என்பதை அதிமுக ஒத்துக்கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால், எல்லா ஆட்சி காலத்திலும் தேர்தலை ஒத்தி போடும் போக்கு தமிழகத்தில் உள்ளது. இது உள்ளாட்சி ஜனநாயகத்தை மதிக்காத ஒரு போக்கு. அது சரியல்லலை. சட்டப்பேரவை தேர்தல் முடித்த பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். ஆட்சியில் பங்கு குறித்து எங்களின் நிலைப்பாட்டை ஏற்கெனவே விளக்கி விட்டோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.