‘ஓராண்டு காலமாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சிகளுக்கான உரிமையை பறித்த முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறார்’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஓராண்டு காலமாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சிகளுக்கான உரிமையை பறித்து மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறார்.
தான் ஆளும் தமிழ்நாட்டில் மாநிலத்துக்கு உள்ளாக உள்ள முறையான அதிகார பகிர்வை, அதாவது உள்ளாட்சிகளுக்கு உரிமை கொடுக்க முடியாதவர், எல்லா மாநிலங்களுக்கும் சமமாக தனது நிர்வாகத்தை எந்த பாராபட்சமும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசை பார்த்து குறை கூறிக் கொண்டிருக்கிறார்.
தேர்தலில் வளர்ச்சியை சொல்லி வாக்கு கேட்க முடியாத திராவிட முன்னேற்ற கழகம், மாநில சுயாட்சி என்று முதலில் கோரிக்கை வைத்து பின்பு தாங்கள் மத்தியில் ஆட்சியில் வரும்பொழுது அதை எல்லாம் மறந்து, இன்று மறுபடியும் தோல்வி பயம் வரும் பொழுது இதைப் போன்ற கோரிக்கைகளை கையில் எடுக்கிறார்கள். திமுகவின் தோல்வி பயத்தையே இது காண்பிக்கிறது’ என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?
முன்னதாக, “ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுப்பது, ஜி.எஸ்.டி இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அதிகாரங்களை கபளீகரம் செய்கிறது மத்திய அரசு. அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும்.
கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் போட்டியாளர்கள் அல்ல. இருவரும் பொது அமைப்பின் பங்குதாரர்கள். மாநிலங்கள் வளர்ந்தால்தான் மத்திய அரசு வளரும். மாநில சுயாட்சிக்கான முன்னெடுப்பை நாம்தான் செய்ய வேண்டும். நம்மைவிட்டால் செய்ய யாரும் இல்லை. இது வரலாறு வழங்கி இருக்கும் வாய்ப்பு” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

