மாநிலங்களவைத் தேர்தல் ‘கணக்கு’ – நெருக்கடியில் அதிமுக… சிக்கலில் திமுக!

18 0

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நடைபெறவுள்ள ராஜ்யசபா எம்.பி தேர்தல், தமிழக அரசியலில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சீட் கேட்டு கூட்டணிக் கட்சிகள் நெருக்குவதால் திமுக, அதிமுக வட்டாரம் திகிலில் உறைந்துள்ளது.

மாநிலங்களவையில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ் ஆகிய திமுக எம்.பி.க்கள் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை, அதிமுக ஆதரவோடு எம்.பியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கு மார்ச் 16-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே ராஜ்யசபா தேர்தல் நடக்கவுள்ளதால், திமுக, அதிமுக எனும் இரு பிரதான கட்சிகளும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. காலியாகும் 6 இடங்களில் தற்போதைய சூழலில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் உறுதி. ஆனால், இந்த இடங்களுக்கு கூட்டணி கட்சிகளும் குறிவைத்துள்ளதால், இரு கட்சிகளும் விழிபிதுங்கி நிற்கின்றன.

அலறும் அதிமுக!

இந்த தேர்தலில் அதிமுகவுக்கு கிடைக்கப்போவது என்னவோ இரு எம்.பிக்கள்தான். ஆனால், அதற்கான போட்டிக் களத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக உள்ளது. ஏற்கெனவே தனக்கு ஒரு எம்.பி சீட் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டே பாமக தலைவர் அன்புமணி, அதிமுக கூட்டணிக்குள் வந்தார். எனவே அந்த ஒரு இடம் ஏற்கெனவே ரிசர்வ் ஆகிவிட்டது.

அதிமுக வசம் மீதமுள்ள இன்னொரு இடத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை ஆவலோடு காத்திருக்கிறார். இவர் தவிர்த்து தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் தனக்கு மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அதேபோல, ‘சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை’ என சொல்லிவிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் டெல்லி செல்ல விருப்பமாக உள்ளார். வழக்கம்போல தேமுதிகவும் இந்த ராஜ்ய சீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கிறது.

ஒரு எம்.பி சீட்டாவது நிச்சமயமாக நமது கட்சி நபர்களுக்கு வேண்டும் என அதிமுக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். மக்களவையில் அதிமுகவுக்கு ஒரு எம்.பி கூட இல்லாத நிலையில், மாநிலங்களவையிலும் அதிமுகவுக்கு 5 எம்.பிக்கள்தான் உள்ளனர். அதிலும், தம்பிதுரையின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், அந்த இடத்தையும் வேறு கட்சிக்கு விட்டுக் கொடுப்பதால், தனது டெல்லி செல்வாக்கு குறையும் எனவும் கவலைப்படுகிறது அதிமுக தலைமை.

அதே நேரத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வலுவான கூட்டணியை உருவாக்கும் நெருக்கடியிலும் இபிஎஸ் சிக்கியுள்ளார். எனவே, வேறு மாநிலத்தில் பாஜக கோட்டாவில் ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுக்கும்படி பழனிசாமி டெல்லிக்கு தகவல் சொல்லியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தினகரனின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அதிமுக உறுதி கொடுத்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு, அதிமுக வெளியிட்ட அறிக்கையில், ‘2026=ல் காலியாகும் ராஜ்ய சபா இடங்களில் ஒன்றை தேமுதிகவுக்கு கொடுப்போம்’ என சொல்லியிருந்தது. எனவே தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவந்தால் நிச்சயமாக அவர்களுக்கு ஒரு சீட் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால், இம்முறையும் தேமுதிகவுக்கு சீட் கொடுக்க அதிமுகவுக்கு விருப்பம் இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால்தான் தேமுதிகவிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தையையே இன்னும் தொடங்காமல் இழுத்தடிக்கிறது அதிமுக என்றும் சொல்கின்றனர்.

ஒரு வேளை பாஜக அழுத்தம் கொடுத்தால், ‘உங்கள் கோட்டாவிலேயே தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்குங்கள்’ என நாசூக்காக சொல்லி வருகிறார் பழனிசாமி. ஒரு மாம்பழத்துக்காக பழநியில் உள்ள சாமி சுற்றி சுற்றி வந்ததைப் போல, ஒரு சீட்டை வைத்துக்கொண்டு கூட்டணிக் கட்சிகளை சுற்றிவர விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

திமுகவிலும் சிக்கல்!

திமுகவும் தனது 4 இடங்களை யாருக்கு கொடுப்பது என்ற சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது. திருச்சி சிவாவுக்கு ஒரு சீட் நிச்சயமாகிவிட்டது. மீதமுள்ள 3 இடங்களில், இம்முறை காங்கிரஸ் தங்களுக்கு ஒரு சீட் கட்டாயம் வேண்டும் என அடம்பிடிக்கிறது. தங்கள் வசம் 17 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஒரு சீட் ஒதுக்குவதில் என்ன தயக்கம் என்றும் கேள்வியெழுப்பி வருகிறது.

அதேபோல, பாமக ராமதாஸ் தரப்பிலும் எங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி எண்ணிக்கையை குறைத்தாலும், மகள் ஸ்ரீகாந்திக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிடுங்கள் என்ற கோரிக்கையோடு கூட்டணிக்கு அணுகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணிக்கு போட்டியாக ஸ்ரீகாந்தியை டெல்லிக்கு அனுப்புவோம் என காய் நகர்த்தி வருகிறதாம் ராமதாஸ் தரப்பு.

இன்னொரு பக்கம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சில திமுக புள்ளிகள் தேமுதிகவிடம் பேச்சு நடத்தி வருகின்றனர். அதில் 6 தொகுதிகள் ஒதுக்க உறுதி சொல்லப்பட்ட நிலையில், கூடுதலாக ராஜ்ய சபா சீட் கொடுத்தால் உடனே கூட்டணியில் சேருகிறோம் என்று காத்துக்கிடக்கிறதாம் முரசு கட்சி.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரபரப்பே பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், கூடுதலாக ராஜ்ய சபா தேர்தலும் அனலை அதிகமாக்கியுள்ளது. நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தல் சில கூட்டணிக் கணக்குகளையும் மாற்றிப் போடும் என்பதில் சந்தேகமில்லை.