சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.84.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 13.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் சென்னை சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 84.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), தமிழ்நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்குதல், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (SEZ) எல்காட் நிறுவியுள்ளது.
சென்னை, சோழிங்கநல்லூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2.33 லட்சம் சதுர அடி பரப்பளவில் 84.42 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த தகவல் தொழில்நுட்ப கட்டடத்தின் மூலம் சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

