வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மூன்று நாட்கள் விழா நடத்தப்படும் என்பது உட்பட 7 அறிவிப்புகளை அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற “அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026”-யை தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ”கடந்த ஆண்டு 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டை நடத்தி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தோம். இன்றைக்கு அனைத்துலக வள்ளலார் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
வள்ளலாரை ஏன் நாம் உயர்த்திப் பிடிக்கிறோம் என்றால், “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி, உலகுக்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவரது வழியில்தான், நமது திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை மக்களின் பசியை ‘பிணி’ என்று சொன்னார் வள்ளலார்! அந்தப் பிணியை ஒழிக்கும் மருந்துதான் நமது திராவிட மாடலின் திட்டங்கள்! அதனால்தான், பள்ளிகளில், காலை உணவுத் திட்டம் முதல் முதியோர்களுக்கான தாயுமானவர் திட்டம் வரை, அனைத்து வயதினரையும், கருணையோடு அரவணைக்கின்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
வள்ளலார் தமிழ்ச்சமூகத்தில் உதித்த புரட்சியாளர்; மாண்பாளர்! அவரைப் போற்ற வேண்டியது, தமிழ்நாட்டின் கடமை! என்னுடைய பேச்சுகளிலும், சமூக வலைத்தளப் பதிவுகளிலும் வள்ளலாரை நிறைய நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். வள்ளலாரின் கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமல்ல, அவற்றை செயல் வடிவத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அவற்றையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கருணாநிதி ஆட்சிக் காலத்தில், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதிக்கு, ‘வள்ளலார் நகர்’ என்று பெயர் வைத்தார். அந்த வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தை 10 கோடி ரூபாய் செலவில் புனரமைத்திருக்கிறோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதும் வள்ளலார் பிறந்தநாளை, ‘தனிப்பெருங்கருணை நாளாக’ அறிவித்தோம்.
வள்ளலாரின் 200-ஆவது பிறந்தநாள் – தருமசாலை நிறுவப்பட்ட 156-ஆவது ஆண்டு தொடக்கம் – ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ஆவது ஆண்டு ஆகியவற்றை இணைத்து, 2022 அக்டோபரில் இருந்து 2023 அக்டோபர் வரை தொடர்ச்சியாக ஓராண்டு காலம் முப்பெரும் விழாக்களை கொண்டாடினோம்.
அதுமட்டுமல்ல, ‘வள்ளலார் 200’ என்ற பெயரில் இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் வெளியிட்டு அன்னதானம், மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லத்தை புனரமைத்தோம். தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், மூன்று நாட்கள் அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றைக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என்று பெயர் சூட்டி திறந்து வைத்திருக்கிறோம். இந்தச் சாதனைகளின் தொடர்ச்சியாகதான், வள்ளலார் பற்றாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரின் உயரிய கருத்துகளை, வாழ்க்கை நெறிகளை, உலகெங்கும் போற்றிடும் நோக்கத்துடன் இன்று, அனைத்துலக வள்ளலார் மாநாடு நடத்தப்படுகிறது.

