துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ராஜன் லால் (79) சுமார் 25 வருட காத்திருப்புக்குப் பிறகு லாட்டரியில் ரூ.9 கோடி வென்றுள்ளார்.
நீண்ட காலமாக துபாயில் வசிக்கும் ராஜன் லால், கடந்த ஜனவரி 30-ம் தேதி வரிப் பிடித்தம் இல்லாத மில்லினியம் மில்லியனர் குலுக்கலுக்கான லாட்டரி சீட்டு வாங்கினார். குலுக்கலில் 3099 என்ற எண் கொண்ட அந்த லாட்டரி சீட்டுக்கு 10 லட்சம் டாலர் (ரூ.9 கோடி) பரிசுத் தொகை வென்றுள்ளார். ராஜன் லால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர். மேலும் 3 முறை மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில் தனது 79-வது பிறந்த நாளை கொண்டாடிய சில நாட்களில் அவர் இந்தப் பரிசை வென்றுள்ளார். இதுகுறித்து ராஜன் லால் கூறுகையில், “நான் கற்பனை செய்து பார்க்காத மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு இது” என்றார்.
பரிசுத் தொகையை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை. மாறாக வரவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார். பல வருட விடாமுயற்சிக்குப் பிறகு ராஜன் லாலுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.
“கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிக்கெட் வாங்கி வருகிறேன். இதுவரை பரிசு வென்றதில்லை. திரைப்படத் துறை நண்பர்களை சந்திக்க மும்பைக்கு பயணித்த போது இந்த டிக்கெட்டை வாங்கினேன். சவுதி அரேபியாவில் இருந்த போது இந்த பரிசுத் தொகை குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தருணம் நம்ப முடியாததாக இருந்தது” என்றார்.

