சட்டமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் முதல்வரை சந்தித்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா? என்ற கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில், மேலும் 2,065 ஏரிகள் ரூ.300 கோடியில் தூர்வாரப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் கோடை விழாவையும், மலர் கண்காட்சியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “சேலம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டங்களில் இருக்கின்ற ஏழை, எளிய மக்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டுகளிக்கக்கூடிய அளவிற்கு சிறப்பான ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது” என்றார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. தமிழக அரசின் நிலைபாடு என்ன?.
பதில்:- முழுமையாக அதை படித்துப் பார்த்துத்தான் பதில் சொல்லவேண்டும். முழுமையான செய்தி இன்னும் வரவில்லை. அது வந்தபிறகு பதில் சொல்கிறேன். பத்திரிகை செய்தியை வைத்து ஒன்றும் சொல்லமுடியாது. அரசு ஆணை வந்த பிறகுதான் அதற்கு சரியான பதில் சொல்லமுடியும்.
கேள்வி:- சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதையும் தாண்டி, படம் திறக்க வாய்ப்பு இருக்கிறதா?.
பதில்:- எதிர்ப்பு என்பது ஒன்று, சட்டப்படி திறப்பது என்பது ஒன்று. சட்டப்படி ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும். ஜெயலலிதா 6 முறை தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருந்து மக்கள் மனதில் இன்றைக்கு குடிகொண்டிருக்கிறார். நான் ஏற்கனவே இந்த அரங்கிலே பேசுகின்றபொழுது சொன்னேன், இன்றைக்கு யார், யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் மெரினா கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்வையிடுகிறபொழுது, ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் அஞ்சலி செலுத்துகின்ற காட்சியை பார்த்த பிறகு, தமிழ்நாட்டு மக்களிடத்திலே ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் இருக்கின்றது என தெரிந்துகொள்வார்கள். ஆகவே, அப்படி மக்களிடத்திலே செல்வாக்கு மிக்க, மக்களுக்காக உழைத்த தலைவர் ஜெயலலிதா. அவருடைய உருவப்படத்தைத் தான் சட்டமன்றத்திற்குள் திறக்கப்போகிறோம்.
கேள்வி:- தி.மு.க. ஏரிகளை தூர்வார தொடங்கியிருக்கிறார்கள், அதை எப்படி பார்க்கிறீர்கள்?.
பதில்:- அரசின் சார்பாக குடிமராமத்து திட்டம் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை அறிவித்து, விவசாயிகளினுடைய பங்களிப்புடன் முதற்கட்டமாக, 1510 ஏரிகள், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த பணி தொடங்கப்பட்டு நிறைவடைகின்ற சூழ்நிலையில் இருக்கிறது. ஆகவே, நாங்கள் கொண்டுவந்த திட்டத்தை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்று நான் கருதுகின்றேன். மேலும் இந்த திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு, பருவமழையின்போது பெய்கின்ற மழைநீர் முழுவதையும் சேமித்து வைக்கவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு இன்றைக்கு ஜெயலலிதாவினுடைய அரசு மேலும் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,065 ஏரிகள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:- இரு அணிகளும் மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்த ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?.
பதில்:- இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். நிச்சயமாக, 2 அணிகளும் இணையும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி:- அமைச்சரவையில் ஏதாவது மாற்றம் இருக்குமா?.
பதில்:- எதுவும் இல்லை.
கேள்வி:- சில சட்டமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சரை சந்தித்திருக்கிறார்கள்….
பதில்:- ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும், 234 சட்டப்பேரவை உறுப்பினர்களும் முதல்-அமைச்சரை சந்திப்பது இயற்கை தான். ஆகவே, இன்றைக்கு முதல்-அமைச்சரை சந்தித்து, தங்களுடைய தொகுதியில் இருக்கின்ற பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக கொடுக்கின்றார்கள், அதை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கைவைக்கிறார்கள். அந்த அடிப்படையிலே, இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களை சந்திக்கின்றார்கள், ஆளுகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களை சந்தித்து, ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றித் தாருங்கள் என்று கோரிக்கை மனு கொடுக்கிறார்கள். அந்த வகையிலே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்னை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து, தூர்வாரிக்கொண்டிருக்கிறார்களே, அதற்காக நிதி ஏதாவது ஒதுக்குவீர்களா?.
பதில்:- இது குடிமராமத்து திட்டம், இது விவசாயிகளின் பங்களிப்போடு நடைபெறுகின்ற திட்டம். ஆக, நீங்களும் விவசாயிகளோடு சேர்ந்து இந்த பணியை மேற்கொண்டால் அது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், உங்களைப் போல சமூக ஆர்வலர்கள் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். இங்கே பொழிகின்ற மழை நீரை முழுமையாக சேமித்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையிலே தான் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
உங்கள் எல்லோருக்கும் தெரியும், 140 ஆண்டு காலம் இல்லாத கடுமையான வறட்சி தமிழகத்திலே நிலவிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு அணைகள், ஏரிகள், குளங்களில் எல்லாம் போதிய நீர் கிடையாது. இருந்தாலும், ஜெயலலிதாவினுடைய அரசு மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் பார்த்துக்கொள்வதற்காக தேவையான நிதி ஒதுக்கி, குடிநீருக்கு எங்கெங்கெல்லாம் குடிநீர் பிரச்சினையை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் உடனடியாக ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டு அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு, இவ்வளவு வறட்சியான நேரத்திலும் கூட குடிநீர் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, கடுமையான வறட்சி நிலவுகின்ற இந்த தருணத்தில் கூட, விலைவாசி உயராமல் ஜெயலலிதாவினுடைய அரசு பார்த்துக்கொண்டிருக்கிறது. இது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், கடுமையான வறட்சி. இப்படிப்பட்ட கடுமையான வறட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினையும் இல்லை, விலைவாசியும் உயரவில்லை. அப்படிப்பட்ட உன்னத ஆட்சி, ஜெயலலிதாவினுடைய அரசு இன்றைக்கு தமிழகத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதைத் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

