கேரள முன்னாள் மத்திய மந்திரிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

441 0

மாட்டு இறைச்சி தடை சட்டத்தை விமர்சிப்பதா? என்று கேரள முன்னாள் மத்திய மந்திரிக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு மிகவும் வரைமுறைப்படுத்தி மாட்டு இறைச்சி தடை சட்டத்தை அறிவித்துள்ளது. இது மதசார்பற்ற பிரச்சினை. இதனை அரசியல்வாதிகள் தேவையின்றி விமர்சித்து வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி இதுதொடர்பாக மத்திய அரசை குறை கூறி உள்ளார். அரசின் ஆணையை கிழித்தெறிவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நதிநீர் இணைப்பு திட்டத்தில் இருந்து கேரளா ஒரு சொட்டு தண்ணீர் கூட தரவில்லை. அங்கு மனிதர்களை தான் காவு கொடுக்கிறார்கள். அவர்கள் இதுபற்றி பேச தகுதி இல்லை.

ஜி.எஸ்.டி. தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனை பதிவு செய்யலாம். ஐ.டி. ஊழியர்கள் பணி இழக்கப்படுவது குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசி வருகிறோம்.

நடிகர் ரஜினி படப் பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். ஆனால் அமித்ஷாவை பார்க்க செல்கிறாரா என கேட்கிறீர்கள். முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். தற்போது அவர் தனது தொழிலை பார்க்கட்டும். அவரது திரைப்படங்களை விட, ரஜினி பற்றி தற்போது பேசி வருவது சுவாரஸ்யமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.