தொடரும் மழை – பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

315 0

அதிக மழை காரணமாக மாத்தறை, காலி, ரத்தினபுரி மற்றும் குளத்துறை மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, கொடபொல மற்றும் அகுரஸ்ஸ ஆகிய பகுதிகளின் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரத்தினப்புரி மாவட்டத்தின் எலபாத்த பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மழை காரணமாக காலி மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தின் காலி – பத்தேகம, காலி – கராபிட்டிய, காலி – அம்பலன்வத்த மற்றும் உடுகம – பத்தேக ஆகிய வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், காலி மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

காலி, பலபிட்டிய மற்றும் பத்தேகம பகுதிகளில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் அதிக மழையுடனான காலநிலையால், கிங் மற்றும் நில்வலா ஆகிய கங்கைகள் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் களனி மற்றும் களு கங்கைகளும் பெருக்கெடுக்கும் நிலைக்கு வந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

எனவே இந்த கங்கைகள் ஊடறுத்து செல்லும் பகுதிகளில் தாழ்நிலங்கில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் வீசிய கடும் காற்றின் காரணமாக, நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிவடைந்து வீழ்ந்துள்ளன.

வவுனியா காவற்துறை நிலையத்துக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில், மரத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 உந்துருளிகளும், உழவு இயந்திரம் ஒன்றும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மத்தளை – ரத்தொட – பண்டாரபொல பகுதிகளை ஊடறுத்துச் சென்ற கடும் காற்றின் காரணமாக, வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் 7 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் மண்சரிவு ஒன்றின் காரணமாக தெல்கொட – காலி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என்று காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளார்.

குறிப்பாக ரத்தினபுரி, காலி, நெலுவ, தெனியாய ஆகிய பகுதிகளில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பல மாதங்களாக நீர் கிடைக்காதிருந்த நீர்மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அருகில் நேற்று முதல் அதிக மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக லக்ஸமான நீர்மின்னுற்பத்தி நிலையத்துக்கு அருகில் அதிக மழை கிடைத்துள்ளதாக மின்சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.