வடக்கு கிழக்கில் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுக்கப்படும் – அரசாங்கம்

357 0

திருகோணமலையில் உள்ள பல பகுதிகளில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா இது தொடர்பான கேள்விகளை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதற்கு பதில் வழங்கிய காணி அமைச்சர் கயந்தகருணாதிலக, செல்வநாயகபுரம், ஆனந்தபுரி, நித்தியபுரி, தேவநகர், லிங்க நகர், நல்லூர் போன்ற இடங்களில் காணிச் செயலகங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பல இடங்களில் அந்த செயலகங்கள் நடத்தப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்த நிலையில் நாளை தாம் காணி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும், தேசிய மட்டத்தில் காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் மன்றில் உரையாற்றிய சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியல்ல அரசாங்கம் வடக்கு கிழக்கில் சுமார் 5000 ஏக்கர் காணிகளை இதுவரையில் விடுவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.