கிழக்கிலும் ஒரு முள்ளிவாய்க்கால் கொடூரம் நடக்காது தடுத்தது சந்திரகாந்தனின் தூரநோக்கிய சிந்தனையே – பூ.பிரசாந்தன்

216 0
வடக்கில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து அப்பாவிப்பொதுமக்களின் ஆத்மாசாந்திக்காக எப்போதும் நாம் பிராத்திப்பதுடன் அவர்களின் உறவுகள் இந்த கொடூர பாதிப்பு வேதனையிலிருந்து வெளிவந்து தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பு.
அதேவேளை வடக்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கொடூரம்போல் துயரச்சம்பவம் கிழக்கில் நடைபெறாமல் தடுத்தமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனின் தூரநோக்கிய சிந்தனை என்பதனை யாரும் மறுக்க முடியாது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையும் அதன் செயற்பாடுகளையும் விமர்சித்தவர்கள் இன்று இணக்க அரசியல் என்று சொல்லிக்கொண்டு என்ன செய்கின்றனர்?? 1976ம் ஆண்டு இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்து அரசியல் இலாபம் தேடி ஆட்சிக்கு வந்தவர்கள்.
2001 இன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மூலம் மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறியவர்கள்.
யுத்தத்தால் காணமல் போனவர்களையும், புலிகளின் பெயரினையும் வைத்து அரசியல் செய்தவர்கள் இன்று எதிர்க்கட்சி அதிகாரம் கிடைத்ததும் என்ன கூறுகின்றார்கள், தாம் அகிம்சைவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் அல்ல என்றும் இலங்கையில் யுத்தத்தால் காணாமல் போனவர்களுக்கு நாம் காரணம் இல்லை எனவும் சூளுரைக்கின்றனர்.
தமிழீழ பிரகடனம் செய்ததும், தனி நாட்டுக்கோரிக்கையினை முன்வைத்ததும் எந்த தமிழ் போராட்டக் குழுக்களும் அல்ல இந்த தமிழ் தேசியம் பேசும் அரசியல் தலைமைகளே. என்பதனை மறைக்க முற்படுகின்றனர். யுத்தத்தில் களமாடிய போராளிகளின் சமாதிகளில் நின்று அரசியல் செய்பவர்கள் பாதிக்கப்பட்ட அங்கங்களை இழந்த, பொருளாதாரத்திற்காக வறுமையுடன்
போராடும் எத்தனை போராளியின் குடும்பத்திற்கு உதவி புரிந்துள்ளது.
வடக்கைப்போன்று கிழக்கிலும் ஓர் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்திருந்தால் நினைவேந்தல் செய்வதற்கு மாத்திரம் அரசியல் ரீதியாக அலைமோதுவார்களே தவிர ஆழமான காரியம் எதுவும் செய்ய முன்வரப்போவதில்லை.
2012ம் ஆண்டு தமிழனிடம் இருந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியினை பிடுங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2015இல் தேசிய நல்லாட்சியின் பங்காளிகளானதுடன் கிழக்கு மாகாணத்தில் இணக்க ஆட்சியின் அமைச்சர்களும் ஆனார்கள். மாகாண ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தும் அதனை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு அடங்கிப்போன ஆட்சி நடத்துகின்றனர். இதற்காகத்தானா இலட்சக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான உடமைகளையும் இழந்து தமிழ் சமுகம் போராடியது?
நில,நிர்வாக,நிதிப் பங்கீடுகளில்  பாரிய இன அடக்குமுறை கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் போதும் வேடிக்கை பார்ப்பதற்கும் பத்திரிகையில் வீரம் பேசுவதற்கும் மாத்திரமா தமிழ் மக்கள் வாக்களித்தனர்? என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்பினார்.