300 பௌத்த மத துறவிகள் யாழ்ப்பாணத்தில் விஷேட பூஜை

377 0

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சுமார் 300 பௌத்த மத துறவிகள் சென்று விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இராவண பலக்காய எனும் அமைப்பை சார்ந்த துறவிகளே இவ்வாறு விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவற்குழி சிங்கள குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையிலேயே மேற்படி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை வடக்கு கிழக்கு ஆகிய தமிழ் மற்றும் மூஸ்லீம் மக்களது பூர்விக காணிகளில் அத்துமீறிய வகையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ் முஸ்லிம் நாடாமன்ற உறுப்பினர்களும், மக்களும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.

இத்தகைய நிலையில் குறித்த நாவற்குழி பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரைக்கு புதிதாக பல கோடி ரூபா செலவில் புதிய தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்லானது அண்மையில் இராணுவ பிரிகேடியர் ஒருவரால் நாட்டப்பட்டிருந்தது.

எனினும் குறித்த விகாரையில் புதிய தூபி அமைப்பதற்கான அனுமதியை சாவகச்சேரி பிரதேசபை வழங்கியிருக்காத நிலையில் அது தொடர்பாக குறித்த நாவற்குழி பௌத்த விகாரையின் விகாராதிபதிக்கு கடிதமொன்றையும் பிரதேசபை அனுப்பியுள்ளது.

எனினும் பிரதேசபையின் எந்தவொரு அனுமதியும் இன்றியே புதிய விகாரை அமைப்பதற்கான அடிக் கல்லானது நாட்டப்பட்டிருந்தது.

இவ்வாறு குறித்த நாவற்குழி விகாரை தொடர்பாக தொடர்ச்சியாக சர்சைகள் ஏற்பட்டுள்ள நிலையிலும், தென்னிலங்கை பகுதிகளில் பௌத்த அமைப்புக்களால் இனவாத ரீதியான செயற்பாடுகளும், மூஸ்லிம் வழிப்பாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த பௌத்த துறவிகளது யாழ்ப்பாணத்திற்கு செல்வுள்ளமையானது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.