ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் – இராணுவ மேஜர் உள்ளிட்ட 6 புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு

311 0

ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இராணுவ மேஜர் உள்ளிட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் ஆறு பேரும், குறித்த தாக்குதல் சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் நேற்று இதனை அறிவித்தார்.

கடந்த தினம் கல்கிஸ்சை நீதிமன்றம் சந்தேகத்திற்குரியவர்களுக்கு பிணை வழங்கியது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமா அபதிர் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய, ஊடகவியலாளர் கீத் நொயார் தொம்பே பிரதேசத்தில் குடியிருப்பில் தங்கியிருந்த வேளையிலேயே தாக்குதலுக்கு உள்ளானதாக குறிப்பிட்டார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து தொம்பேயில் அவர் தங்கிருந்த குடியிருப்பு வரையிலான வீதியில் பயன்படுத்தப்பட்ட தொலை பேசி இலக்கம், குறித்த இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர் பயன்படுத்தியுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் நீதிமன்றிட்கு அறிவித்தார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இராணுவ மேஜர் உள்ளிட்ட 6 இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களுக்கும் கல்கிஸ்சை நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.