நாட்டில் இடம்பெறும் இன முறுகல் விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பபட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த செயல்கள் நடைமுறை அரசாங்கத்தின் திட்டங்களை பாதிக்கும் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
அனுரகுமார திசாநாயக்க உரையாற்றும் போது, நாட்டில் இனவாதிகளும் மதவாதிகளும் தமது நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளமையை காண முடிவதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ள காவற்துறை உள்ளிட்ட நிறுவனங்கள் உரிய முறையில் செயற்படாவிட்டால் பாதிக்கப்படும் மக்கள் தமக்கு எதிரான பிரச்சினைகளை தீர்த்து கொள்ள தாமே தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனையடுத்து பதில் வழங்கிய சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, குறித்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை பொறுத்தவரையில் சட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள குறைப்பாடுகளே வன்முறை சம்பவங்களுக்கு காரணங்களாகும் என குறிப்பிட்டார்.
எனவே சட்டத்தை அமுல்படுத்தும் காவற்துறையினர் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
உரிய முறையில் பிரச்சினைகளை ஆராயாது குறித்த நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே தற்போது எழுந்துள்ள நிலைக்கு காரணமாகும்.
எனவே இதற்கு புதிய மருந்து எதனையும் கண்டுபிடிக்க அவசியமில்லை.
காவற்துறையினர் நீதியை நடைமுறைப்படுத்தும் போது இன, மத பேதங்களை பார்பதில்லை.
அனைத்து இலங்கையர்களுக்கும் சமமான நீதியையே அவர்கள் வழங்குவர்.
எனவே வன்முறைகளை தூண்டுவோர் மற்றும் வன்முறைகளை தூண்டும் உரைகளுக்கு எதிராக சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டும் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரரணைகள் இடம்பெற்று கொண்டிருப்பதால் காவற்துறை தரப்பில் இருந்து தம்மிடம் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விசாரணைகள் முடிந்ததும் அது தொடர்பான முழு அறிக்கையும் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

