தமிழ் மொழி மூல பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை

368 0

வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட தமிழ் மொழிப் பாடசாலையொன்றில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா – செட்டிகுளம், இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலயத்திலேயே இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பாடசாலையில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தமிழ் மொழி கற்பிக்கப்படவில்லை எனவும், முதலாம் தவணைப் பரீட்சையில் தமிழ் மொழிக்கான புள்ளிகள் வழங்கப்படாது தேர்ச்சி அறிக்கையில் தமிழ் மொழி புள்ளி பதியும் இடம் வெட்டப்பட்டு உள்ளதாகவும் மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.
தரம் 11 வரையுள்ள குறித்த பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கப்படாமையால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாடசாலையில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றியவர் கடந்த ஜனவரி மாதம் இடமாற்றம் பெற்று சென்றதாகவும், அதன் பின்னர் புதிய ஆசிரியர் நியமிக்கப்படாமையே இந்த பிரச்சினைக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும், பெற்றோர்களும், மாணவர்களும் தங்களது பாடசாலைக்கு தமிழ் ஆசிரியரை நியமித்து தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.