இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய சந்தேகநபர் குறித்து விசாரணை

366 0

கிரிஸ்டல் என அழைக்கப்படும் அய்ஸ் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பிரதான சந்தேகநபரைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகளை மதுவரித் திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வகை போதைப் பொருள் வத்தளை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கைப்பற்றப்பட்டது.

இதற்கமைய இரு பெண்கள் வசமிருந்து 200 கிராம் அய்ஸ் போதைப் பொருள் இதன்போது மீட்கப்பட்டதுடன், இவற்றின் பெறுமதி 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இரு பெண்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த போதைப் பொருள் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்டதாக அறியக் கிடைத்துள்ளது.

துணி வியாபாரம் என்ற போர்வையில் நீண்ட நாட்களாக இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்து வந்துள்ளது என மதுவரித் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பெண் ஒருவர் உடலில் மறைத்து வைத்து இந்த போதைப் பொருளை நாட்டுக்குள் எடுத்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில், கைதான சந்தேகநபர்கள் இருவரும் வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.