ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் தேர்வில் எந்த விதமான குளறுபடிகளும் நடைபெறவில்லை என கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்தும் வர்த்தமானி அறிவித்தலின் படியே நடைபெற்றுள்ளது.
இந்த தேர்வுகள் தொடர்பாக எந்த நேரத்திலும் யாரும் பார்வையிட முடியும் என ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் மாணவர்கள் இரண்டாம் கட்டமாக உள்வாங்கிய பொழுது பெருந்தோட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக நான் ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதியிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் என்னிடம் கருத்து தெரிவிக்கின்ற பொழுது எங்களால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளை தற்பொழுது கல்வி அமைச்சு மீள் பரீசீலனை செய்து கொண்டிருக்கின்றது.
நாங்களும் அதனை முழுமையாக மீள் பரீசீலனை செய்திருக்கின்றோம்.
அதன் அடிப்படையில் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது.
அதில் 200 பேர் வரை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்முகத் தேர்விலும் முதலாவதாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு முதலாவது முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அதற்கு அடுத்த படியாகவே பெருந்தோட்டங்கள் அல்லாத மாணவர்களுக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
வர்த்தமானியின் படி ஆரம்பபிரிவு ஆசிரியர்களை உள்வாங்குகின்ற பொழுது கணித பாடத்தில் ´சி´ தர சித்தியும் தமிழ் மொழியில் ´சி´ தர சித்தியும் ஆங்கில பாடத்தில் எஸ்.தர சித்தியும் தேவைப்படுகின்றது.
அதே நேரத்தில் வர்த்தகம் அல்லது விஞ்ஞான துறையில் கற்றவர்களாக இருந்தால் அவர்கள் தமிழ் மொழியில் க.பொ.த சாதாரண தரத்தில் ஏ தர சித்தியை கொண்டிருக்க வேண்டும்.
இதுவே வர்த்தமானி அறிவித்தலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.சில பயிற்சி நெறிகளுக்கு பிள்ளைகள் குறைவாகவே இருக்கின்றார்கள்.
ஆனால் அந்த பயிற்சி நெறிக்கு தகுதியானவர்கள் அதாவது இந்திய வமசாவளி தமிழர்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.எனவே அவர்களை உள்வாங்குவதற்கு விசேட அனுமதியை பெறுவதற்கு நாம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

