நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தம்

764 0

சயிடம் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 12 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அது 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, அச் சங்கத்தின் ​பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கமைய நாளை காலை 08.00 மணி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சட்டவிரோதமான சயிடம் நிறுவனத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த போது, மிலேட்சத்தனமான முறையில் அவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் கைதுசெய்யப்பட்டமை, வைத்திய சபைக்கு கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட நபரைக் கைதுசெய்யாமை, தொழிற் சங்க தலைவர்களை ஒடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள், உள்ளிட்ட சில காரணங்களுக்காகவே இவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், மேற்குறித்த விடயங்களுக்கு உரிய பதிலளிக்காத அதிகாரிகளே, நாளைய வேலை நிறுத்தம் காரணமாக நோயாளிகளுக்கு ஏற்படப் போகும் சிரமங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.