மாதிரிக்கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் தாம் எப்போது தமது பூர்வீக நிலத்திற்கு செல்வோம் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர்போராட்டம், இன்று 83 ஆவது நாளை எட்டியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக சொந்த நிலத்தைவிட்டு வெளியேறிய பொதுமக்கள் இன்று வரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
மீள்குடியேற்றம் செய்யப்போவதாக தெரிவித்து, கடந்த 2012 ஆம் ஆண்டு மாதிரிக்கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த எட்டு வருடங்களாக பொதுமக்கள் தமது நிலத்திற்கு செல்வதற்கான தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் தமது காணிகளுக்குள் கால் பதிக்கும் வரையான தொடர் போராட்டத்தை கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் தமது பூர்வீக நிலத்தில் இராணுவத்தினர் குடியிருக்க தாம் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூதாட்டி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை இன்றைய தினம் குறித்த பகுதிக்கு வந்த பருத்துறை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அணியொன்று ஒருதொகுதி உலருனவுப்போருத்களையும் கையளித்து சென்றனர்.

