வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை

378 0

தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே, சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வீடு மற்றும் அதனைச் சார்ந்த குடும்பத்தினரின் கடன் அதிகரித்து வருவது குறித்து நாம் கவலையடைகிறோம். போருக்குப் பின்னர் குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெயர்ந்த குடும்பங்கள் தமது சொந்த நகரங்களுக்குத் திரும்பி வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு போராடி வருகின்றன.

மூன்று பத்தாண்டுகளாக இழப்புக்களைச் சந்தித்தவர்கள், தமது வாழ்வாதாரத்துக்காக கடுமையாக கடன்களைப் பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.சிறிலங்கா மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையில்,  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமை மட்டம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயத்தை அதிகளவில் அடிப்படையாகக் கொண்ட வடக்கு மாகாணம் வரட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.