தொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசி மூலம் தனித்தனியாகத் தொடர்பு கொண்டு பேசிய ஸ்ரீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமர்ப்பித்த திட்டமுன்மொழிவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் 500 ஏக்கர் காணிகளை வழங்க முன்வந்திருப்பதாக ஆந்திர முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியான ஸ்ரீனிவாசன் புதுடெல்லியில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக, தொழில்துறை தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பி வைப்பதாக சந்திரபாபு நாயுடு, ஸ்ரீலங்கா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இந்திய மாநிலம் ஒன்று, ஸ்ரீலங்காவில் தொழில்துறை வலயத்தை உருவாக்குவாக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை இதுவே முதல்முறையாகும்.

