ரோஹியங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் ஆங் சான் சூகியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு

225 0

மியன்மாரில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு காரணமாக ரோஹிங்கியர்கள் பல்வேறு நாடுகளில் சென்று தஞ்சமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு பகுதியினர் அண்மையில் இலங்கையின் வடபகுதியில் கரையேறியுள்ளதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மியன்மார் தலைவி ஆங் சான் சூகியின் கவனத்துக்கு கொண்டுவந்ததார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட வேளையிலேயே இச்சந்திப்பு பீஜிங் நகரில் நடைபெற்றது. சீனாவில் ஆங் சான் சூகியுடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (19) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் நடைபெற்ற முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்ட கலந்துரையாடலின்போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

மியன்மார் 696 இயக்கத்தின் தலைவரான அசின் விராது தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி தெரிவித்ததுடன், ரோஹிங்கிய முஸ்லிம்கள் அவர்களது உரிமைகளுடன் சுதந்திரமான வாழ்க்கையைத் தொடர்வதற்கு உதவுமாறு ஆங் சான் சூகியுடன் வேண்டிக்கொண்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஆங் சான் சூகி, அமைச்சரை மியன்மார் நாட்டுக்கு வந்து நிலைமையை நேரில் கண்டறியுமாறும், மியன்மாரில் இன நல்லிணக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் சொன்னார்.

இதேவேளை, இந்தியா ஊடாக இலங்கையில் கரையேறியுள்ள மியன்மார் அகதிகள் விடயத்தில் நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்காக தாம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் தொடர்புகொண்டதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

பங்களாதேஷ் பூர்வீகத்தைக் கொண்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் நூற்றாண்டு காலமாக மியன்மாரின் அரக்கன் (ரக்கிங்) மாநிலத்தில் வசித்து வருவதோடு, அவர்கள் கடும்போக்காளர்களின் இனவாத செயற்பாடுகளால் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது