1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

234 0

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப்பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மன்றம் தீர்மானிக்கிறது என்று அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க. அரசு 23.1.1968 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பொன்விழா ஆண்டில் நாம் இன்றைக்குப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

சட்டமன்ற வைரவிழா காணும் கருணாநிதி, முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என்ற தமிழ் மொழி கற்கும் சட்டத்தை 13.6.2006 அன்று இயற்றி தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.

தி.மு.க. அரசு கொண்டுவந்த தமிழ் கற்கும் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை தமிழ் மொழி கட்டாயம் என்று 18.9.2014 அன்று அ.தி.மு.க. அரசுக்கு பெயரளவிற்கு ஆணை வெளியிட்டாலும், இன்றுவரை அந்த அரசு ஆணை முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளில் உட்கட்டமைப்புகள், அதற்கேற்ற விதிமுறைகள் போன்றவற்றை ஏற்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் தமிழ் அல்லாத மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் பொதுத்தேர்வு எழுத, தொடர்ந்து விலக்கு பெற்று வருகிறார்கள்.

தமிழை மத்திய ஆட்சி மொழியாக்குவது, தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்குவது போன்றவற்றில் மத்திய அரசை உறுதியாக வலியுறுத்தாமல் அலட்சியம் காட்டி வரும் அ.தி.மு.க. அரசு செம்மொழிப் பூங்கா, செம்மொழி நூலகம் போன்றவற்றை சீர்குலைத்தது. அதேபோல், இப்போது தமிழ் மொழி கற்கும் சட்டத்தின் நோக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கண்ணை மூடிக்கொண்டு இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நேரத்தில் அன்னைத் தமிழ் மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. ஆனால், தமிழ் மொழி பற்றிய சிந்தனையை வருங்கால தலைமுறையிடம் முழுவதுமாக மறக்கடித்து விட வேண்டும் என்று திட்டம்போட்டு மத்திய அரசு செயல்படுவது போல், அ.தி.மு.க. அரசும் செயல்படுவது கவலையளிப்பது மட்டுமின்றி, தமிழ் மொழியின் மீது மாணவ, மாணவியருக்கு இருக்கும் பற்று மற்றும் பாசத்தை பட்டுப்போகச் செய்யும் ஆபத்தான முயற்சியாக அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். அரசுப் பள்ளிகளிலும் போதிய தமிழாசிரியர்களை நியமித்து, தமிழ் மொழி கற்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கவேண்டும். மேலும், தமிழ் மொழியின் தொன்மையையும், வளத்தையும் இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் விதத்தில், ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் அ.தி.மு.க. அரசு செயல்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.