போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏன்? எப்படி முடிந்தது?

305 0

மக்கள் சேவையில் போக்குவரத்து கழகங்கள் சந்திக்கும் இழப்புகளை அரசு ஈடுக்கட்ட மறுத்ததும், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியதும் வேலை நிறுத்தத்திற்கான காரணங்கள்.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ரூ.7ஆயிரம் கோடி பணத்தை போக்குவரத்து நிறுவனங்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டது.இதில் ரூ.1,700 கோடி பணி ஓய்வுபெற்றவர்களுக்கு கொடுக்கப்படாமல் பயன்படுத்திக்கொண்ட பணம்.

தொழிலாளர்களுக்கு உரிய மேற்படி பெரும் தொகையை கையாடல் செய்து ஏழு ஆண்டுகளாக நிலுவையில் வைத்து இருந்தது தான் வேலைநிறுத்தத்திற்கு முக்கிய காரணம்.மக்கள் சேவையில் போக்குவரத்து கழகங்கள் சந்திக்கும் இழப்புகளை அரசு ஈடுக்கட்ட மறுத்ததும், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியதும் வேலை நிறுத்தத்திற்கான காரணங்கள்.

இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடந்த வேலைநிறுத்தத்திற்கு பிறகு எழுத்துப்பூர்வமான உடன்படிக்கை ஏற்பட்டது. ரூ.1,250 கோடியை உடனே வழங்குவது, மூன்று மாதத்திற்குள் ஓய்வுபெற்ற அனைவருக்கும் நிலுவைகளை முழுமையாக பைசல் செய்வது, கழகங்களின் நிதிநிலை மேம்பாட்டிற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை முன்பே ஏன் அரசு செய்திருக்கக்கூடாது?. எனவே, வேலைநிறுத்தத்திற்கு அரசே பொறுப்பு.

ஆனால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் முரளிதரன் மற்றும் சேஷசாயி ஆகியோர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை உடனே முடித்து கொண்டு வேலைக்கு திரும்பவேண்டும் என்றும், அப்படி வேலைக்குத் திரும்பாவிட்டால் ‘எஸ்மா’ என்கிற மத்திய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம் என அரசுக்கு சைகை காட்டியும் உத்தரவு பிறப்பித்தனர்.

ஏற்கனவே ‘டெஸ்மா’ என்று ஒரு தமிழ்நாடு சட்டத்தை ஜெயலலிதா அரசு இயற்றியது. அரசு ஊழியர் போராட்டத்திற்கு எதிராக அந்த சட்டத்தை பயன்படுத்தியது. இப்போது அந்தச்சட்டம் செயலில் இல்லை.


-அ.சவுந்தரராஜன்

தொழிற்தகராறு சட்டப்படி வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்து, பேச்சுவார்த்தை பயனளிக்காத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிற தொழிலாளிக்கு எதிராக எஸ்மாவை ஒருதலைபட்சமாக எப்படி பயன்படுத்த முடியும்? ஒருவேளை அந்த சட்டத்தை அரசு பயன்படுத்தினால், அதை எதிர்த்து தொழிலாளர்கள் உயர்நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும்.

பணத்தை கையாடல் செய்த அரசை, அது அநீதி என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல், இழந்த பணத்தைக் கேட்பவர்களை ஒடுக்கச்சொல்வதா?

போக்குவரத்து கழகங்களுக்கு எதிராக 20 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கள் பணத்தை கேட்டு வழக்குப்போட்டனர். தொழிலாளர்களின் பணத்தை 12 தவணைகளில் திரும்ப வழங்குமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இந்த உத்தரவே அரசிற்கு சாதகமான உத்தரவு. இதைக்கூட போக்குவரத்துக் கழகங்கள் அமல்படுத்தவில்லை என்பதுதான் கொடுமை.

ஓய்வுபெற்ற தொழிலாளியின் பணிக்கொடை தொகையை 30 நாட்களுக்குள் கொடுத்திட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், போக்குவரத்து கழகங்கள் 7 ஆண்டுகளாகியும் வழங்கவில்லை. இந்த பணத்தை 12 தவணைகளில் கொடுத்தால் போதும் என்று உயர்நீதிமன்றம் எப்படி கூற முடியும்?. இந்த உத்தரவை சிறு குழந்தை கூட ஏற்காது. இதற்கு பொறுப்பானவர்களைத்தான் தண்டித்து இருக்க வேண்டும்.

பணத்தை பறித்தவர்களை விட்டுவிட்டு பணத்தை பறிகொடுத்தவர்கள் மீது எஸ்மா சட்டத்தை ஏவச் சொல்வது சரியல்ல.தொழிலாளர் தரப்பு நியாயங்களை கேட்காமலே ஒருதலைபட்சமாக வேலைநிறுத்தத்தை திரும்ப பெறச் சொன்ன தீர்ப்பை தொழிலாளர்கள் ஏற்கவில்லை.

எஸ்மா பாயும் என்று பயந்துதான் வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டதாக சிலர் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.எஸ்மாவையும், டெஸ்மாவையும் ஏற்கனவே சந்தித்தவர்கள்தான் தொழி லாளர்கள். இந்த சட்டங்களை பயன்படுத்தியவர்கள் ஆட்சியை இழந்ததுதான் வரலாறு. 16-ந் தேதியன்று மூன்று அமைச்சர்கள் பேசி உடன்பாட்டிற்கு வராமல் போயிருந்தால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தீர்ப்பையும் மீறி தொடர்ந்திருக்கும். வெற்றிகரமாகவே முடிந்திருக்கும்.
-அ.சவுந்தரராஜன்,
சி.ஐ.டி.யு. மாநில தலைவர்