எடப்பாடி அணிக்கு நடராஜன் ஆதரவு: ஆட்சி நன்றாக இருப்பதாக பாராட்டு

251 0

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனும் குற்ற வழக்குகளில் சிறையில் இருப்பதால் தற்போது சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. இல்லை என்று கூறப்பட்டது.

குறிப்பாக சசிகலாவின் கணவர் நடராஜனின் தலையீடு ஏதும் இல்லை என்றும் அ.தி.மு.க. அம்மா அணியினர் தெரிவித்தனர். 2011-ம் ஆண்டு சசிகலா- நடராஜன் உள்பட அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை அ.தி.மு.க.வில் இருந்து ஜெயலலிதா நீக்கி அறிவித்தார்.

அதன் பிறகு நடராஜன் உள்பட யாரையும் அவர் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது கடந்த டிசம்பர் 6-ந்தேதி அவர்கள் அனைவரும் முக்கியத்துவம் பெற்றனர்.

நடராஜனும், அ.தி.மு.க. பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன் இருவரும் நேரிடையாக கட்சி விவகாரங்களில் தலையிட முடியாத நிலையில் நடராஜன் நிலைப்பாடு என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக இருந்தது. அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கிறாரா? என்ற கேள்விக்குறியும் எழுந்தது.

இந்த நிலையில் அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை பாராட்டி கருத்துக்கள் வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு நன்றாக இருப்பதாகவும், மத்திய அரசின் ஒத்துழைப்பு இருப்பதால் அ.தி. மு.க. ஆட்சி 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றார்.

மேலும் அமைச்சர்கள் சுயமாக சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

நடராஜன் தனது பேட்டியில், தமிழ்நாட்டில் சில இடங்களில் அதிகாரிகள் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

நடராஜனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியை அவர் பின்னணியில் இருந்து இயக்குவது போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடராஜனின் பேட்டி குறித்து அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி கூறியிருப்பதாவது:-

சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தண்டனை பெற்று ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களது குரல் போல நடராஜனின் பேச்சு அமைந்துள்ளது.

இதன் மூலம் அ.தி.மு.க. இன்னமும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது உறுதியாகி விட்டது. சசிகலா குடும்பத்தின் தலையீடு அகற்றப்படும் வரை இணைப்பு பேச்சுக்கு அர்த்தமே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. இரு அணிகளை இணைக்க இரு தரப்பிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரே ஒரு தடவை மட்டும் இரு தரப்பு தலைவர்களும் பேசினார்கள். அதன் பிறகு தலைவர்களின் கருத்துக்களால் இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இந்த நிலையில் நடராஜன் தாமாக முன்வந்து எடப்பாடி பழனிசாமியை பாராட்டி இருப்பதன் மூலம் இணைப்பு முயற்சிக்கான முட்டுக்கட்டை மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அ.தி.மு.க. இரு அணிகளும் இணையுமா? என்பது மிகப்பெரிய கேள்வி குறி எழுந்துள்ளது.