மேட்டூர் அணை நீர்மட்டம் 20.30 அடியாக குறைந்தது

275 0

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், கர்நாடகமும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை அளிக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 20.30 அடியாக குறைந்தது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடையவில்லை. இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளான அணைகள், ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து விட்டது. மேட்டூர் அணையை பொறுத்தவரை, காவிரி நீரை பங்கீடு செய்வது குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம், தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முழுமையாக அளிக்க மறுத்து வருகிறது.

மேலும் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், கர்நாடகமும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை அளிக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. இதனால் மேட்டூர் அணையை நம்பியுள்ள டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அணையின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் மாவட்டங்களுக்கு முழுமையாக தண்ணீர் அளிக்க முடியுமா? என்று கேள்விக்குறியும் ஏற்பட்டது.

இந்த நிலையில், கொளுத்தும் கோடை வெயிலின் தாக் கம் காரணமாக அணைக்கு நீர்வரத்து கடந்த சில வாரங்களாக முற்றிலும் குறைந்து வினாடிக்கு 20 கனஅடிக்கு கீழே சென்றது. நேற்று முன்தினம் வினாடிக்கு 14 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று சற்று உயர்ந்து வினாடிக்கு 26 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் நேற்று 20.30 அடியாக இருந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அடுத்த பருவமழை காலமான ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே அடுத்து வரும் வாரங்களில் குடிநீர் தேவைக்கு மட்டுமாவது தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.