கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழகத்தை பழி வாங்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

212 0

தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது என்று தர்மபுரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் தர்மபுரி விஜய் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். தமிழகத்தின் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் கைகோர்த்து செயல்படுகின்றன. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது. தண்ணீர் கிடைக்காதபோது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கவில்லை.

பருவமழை பொய்த்தால் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேவையான முன்னேற்பாடு செய்யப்படவில்லை. எதிர்காலத்தில், வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் செயல் திட்டங்களை தீட்டி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ‘நீட்‘ தேர்வால் கிராமப்புற ஏழை-எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள்.

தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை தேர்வு வேண்டாம் என்ற முறை அமல்படுத்தப்பட்டதால்தான் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மற்றொருபுறம் புற்றீசல்போல் தனியார் பள்ளிகள் பெருகி வருகின்றன. கல்வி ரீதியாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை பாதிக்கும் செயலாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.