குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது

237 0

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னையில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

13-வது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் அண்ணா தொழிற்சங்கத்தினர் கலந்துகொள்ளவில்லை.

என்ற போதிலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தனியார் டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னை மாநகரில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னையில் உள்ள பல்லவன் சாலை பணிமனை உள்பட 32 மாநகர போக்குவரத்துக்கழக பணிமனைகளில் காலையில் இருந்து குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டது. அதிகாலை முதல் அனைத்து பஸ்களும் பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.

காலை 8 மணிக்கு பிறகே அண்ணா தொழிற்சங்க டிரைவர்கள், தனியார் டிரைவர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்காலிக டிரைவர்களும், தற்காலிக கண்டக்டர்களும் சீருடை இல்லாமல் பணியில் ஈடுபட்டனர்.


தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் நிற்பதை படத்தில் காணலாம்.

சென்னை மாநகர் முழுவதும் 20 சதவீத பஸ்களே இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர்.

அந்த விரைவு பஸ்கள் பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதில் இருந்து போர்டுகள் கழற்றப்பட்டு இருந்தன. அந்த பஸ்கள் இயக்கப்படுமா? என்பதை அறிய ஒரு சிலர் பஸ் நிலையத்தை சுற்றி, சுற்றி வந்தனர். மேலும், காத்திருப்போர் அறையிலும், வளாகத்தில் உள்ள இருக்கைகளிலும் பயணிகள் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.

அதேநேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு ஆம்னி பஸ்கள், தனியார் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டன. அதிக கட்டணம் மற்றும் பாதுகாப்பு காரணமாக பயணிகள் அந்த பஸ்களில் ஏற தயக்கம் காட்டினர்.

கோயம்பேடு மாநகர பஸ் நிலையத்தில் இருந்து மிக குறைந்த அளவு பஸ்களே மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், வியாபாரத்திற்கு செல்பவர்கள் அவதிக்கு உள்ளாயினர்.