வேலைக்கு வரும் டிரைவர்-கண்டக்டர்களை தடுத்தால் நடவடிக்கை

338 0

வேலைக்கு வரும் டிரைவர்-கண்டக்டர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் 2-வது நாளாக ஓடவில்லை.இதனால் தற்காலிக ஊழியர்களை நியமித்து பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் பஸ் போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை.சென்னையில் இன்றும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் உள்ள பஸ் டெப்போக்களுக்கு நேரில் சென்று பஸ்கள் இயக்கப்படுவதை கண்காணித்தார். பெரம்பூர் பணிமனையை ஆய்வு செய்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

போக்குவரத்து கழகத்தில் உள்ள 10 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாற்று ஏற்பாடுகள் செய்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வேலைக்கு வரும் டிரைவர்-கண்டக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. வேலைக்கு வரும் டிரைவர்-கண்டக்டர்களை சில இடங்களில் தடுப்பதாக புகார் வருகிறது. ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தொழிலாளர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை படிப்படியாக வழங்குவதற்கு முதல்-அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே போராடுவோர் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

நிலைமையை சமாளிக்க தனியார் பஸ்கள் அதிகம் இயக்கப்படுகிறது. போராட்டத்தை பயன்படுத்தி தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.