மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை: தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு

221 0

சென்னை வர தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று மாலை அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது.

தமிழக சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 89 ஆக உள்ளது. கடைசியாக பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட அவர்கள், தற்போது சொந்த தொகுதிகளில் பணிகளை கவனித்து வருகின்றனர்.இந்த நிலையில், நேற்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்து, அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் தொலைபேசியில் தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டது.

அதாவது, உடனடியாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை புறப்பட்டு வரவேண்டும் என்றும், மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், சட்டமன்ற கூட்டத்தொடர் முடித்துவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களை தி.மு.க.வினரே தூர்வாருவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே, சட்டமன்ற கூட்டத்தை உடனே கூட்ட முதல்- அமைச்சர், சபாநாயகர் ஆகியோரை வலியுறுத்த வேண்டும் என்று கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவர்னரை சந்தித்து வலியுறுத்தவும் திட்டம் வைத்திருப்பதாக தெரிகிறது.