வேலை நிறுத்தத்தை உடைக்க நினைப்பது சட்ட விரோதம்

256 0

தற்கால டிரைவர்கள் மூலம் வேலை நிறுத்தத்தை உடைக்க நினைப்பது சட்ட விரோதம் என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் தொடங்கி விட்டது. இதற்கு அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இக்கூட்டமைப்பு வருந்துகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வரும் பொதுமக்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
போக்குவரத்து ஊழியர்களின் ரூ. 7000 கோடி பணத்தை எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் செலவழித்து உள்ளன. ஓய்வு பெற்று வீட்டிற்கு போகின்றவர்களின் சேமிப்பு தொகை ரூ. 1,700 கோடியை பல ஆண்டுகளாக வழங் காத பாதகத்தை அரசே செய்துள்ளது. இதில் ரூ. 500 கோடி அடுத்த செப்டம்பரில் வழங்குவோம் என்று அமைச்சர் கூறுகின்றார்.

மொத்தத்தில் இப்போது வழங்கியுள்ள ரூ.750 கோடியும் கூட நீதிமன்ற உத்தரவுகளின் படியும் கோர்ட் அவமதிப்பு வழக்கில் உள்ளவற்றிற்காகவும் தரப்பட வேண்டிய தொகைதான். ஏதோ புதிதாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அள்ளி கொடுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்க அரசு முயற்சிக்கிறது.

போக்குவரத்துக் கழகங்கள் அரசின்  கொள்கை மற்றும் சமூகத்திற்கு செய்யும் உதவிகள் காரணமாக இழப்பை சந்திக்கின்றன. மாணவர் இலவச பயணம், நஷ்டமான வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது போன்றவை மிகவும் தேவையான சமூக நடவடிக்கைகள் ஆகும். எனவே, போக்குவரத்துக்கழக இழப்புகளை அரசு ஈடு செய்ய வேண்டும். இதற்கான கொள்கை அறிவிப்பை நம்பகத்தன்மையுள்ள அளவில் அரசு எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறைவேறாமல் உள்ள ஓய்வுகால சேம நல நிதி தொகை உட்பட அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் மாநிலத்தின் இதர பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை விட குறைவாக உள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான வஞ்சனையாகும். இவற்றை சரி செய்து 13-வது ஊதிய ஒப்பந்தத்தை போட வேண்டும்.

01.04.2003-க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களின் ஓய்வூதியம், தினக்கூலி தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை ஒப்பந்தப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலை நிறுத்தத்தை உடைக்க வேறு பேருந்துகளை இயக்குவது, புதியவர்களை வைத்து ஓட்டுவது போன்றவை ஐ.எல்.ஒ. விதி முறைகளுக்கு விரோதமானது. இது போன்ற அபாய செயல்களில் ஈடுபடாமல் பிரச்சினைக்கு முடிவு காண அரசு முன் வரவேண்டும். சட்ட விரோத நடவடிக்கையாகும். மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொழிலாளர்களின் பணத்தை எடுத்து கையாடியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பணத்தை பறிகொடுத்த போக்குவரத்து ஊழியர்களுக்கு எதிராக பாயக்கூடாது.

காவல் துறை மூலம் அடக்குமுறைகள், பொய் வழக்குகள் போடுவது நடைபெறுகின்றன. இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனே இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டுமாய் கோருகிறோம்.

பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி முதலமைச்சர் உடனே தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். தொழிற்சங்கங்கள் பிரச்சினைகளை பேசி தீர்க்க தயாராகவே உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.இந்தக் கூட்டறிக்கையில் தொ.மு.ச. பேரவை சார்பில் பொருளாளர் கி. நடராசன், சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்.சவுந்தரராஜன், ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., டி.எம்.டி. எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி. டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.