குடும்பிமலை (தொப்பிகல) முருகன் ஆலயத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை படையினர் விலக்கிக் கொண்டுள்ளனர் – கே. துரைராஜசிங்கம்

613 0

குடும்பிமலை (தொப்பிகல) முருகன் ஆலயத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை படையினர் விலக்கிக் கொண்டுள்ளனர். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம்.

மட்டக்களப்பு – பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள குடும்பிமலை (தொப்பிகல) உச்சி முருகன் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு குடும்பிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள படை முகாம் அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்ட விடயம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து படையினர் தடையை விலக்கிக் கொண்டுள்ளதாக ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

குடும்பிமலை ஆலயத்தில் வருடா வருடம் பிரதேச மக்களால் பூசைகள் மேற்கொள்ளப்படுவது வழமை.

அவ்வாறே இம்முறை அங்கு திருவிழா மேற்கொள்ளச் சென்ற பக்தர்களைப் படையினர் குடும்பிமலைஉச்சி முருகன் ஆலயத்திற்குச் செல்ல விடாது தடுத்ததாக அமைச்சரின் கவனத்தி;ற்கு ஆலய நிருவாகத்தினர் கொண்டு வந்திருந்தனர்.

இது விடயமாக தரவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் அதிகாரி பிரிகேடியர் குலதுங்கவுடன் கலந்துரையாடி முருகன் ஆலயத்திற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டது தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது.

தெளிவுபடுத்தலின் பின்னர் தடை நீக்கப்பட்டு முருகன் ஆலயத்திற்குச் செல்லவும் உற்சவத்தினை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

எல்ரீரீஈ இனரின் கோட்டையாகவும் பயிற்சித் தளமாகவும் கருதப்பட்ட தரவை மற்றும் குடும்பிமலைப் பிரதேசம் 2007 இல் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் குடும்பிமலையில் பௌத்த வணக்கஸ் தலமும் அமைக்கப்பட்டு வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்களும் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.