கீதா குமாரசிங்கவின் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இடைநிறுத்தம்

228 0

இலங்கை – சுவிட்சர்லாந்து இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ள காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பதவி வகிக்க தகுதியற்றவர் என மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, அது தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனு விசாரணை செய்து தீர்ப்பளிக்கப்படும் வரையில் அமுல் செய்வதில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலை இன்று இரு வேறு மாறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியில் மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு இரண்டுக்கு ஒன்று எனும் பெரும்பானமை அடிப்படையில் வழங்கியது.

தான் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்ரவர் என கடந்த மூன்றாம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தமையை எதிர்த்து கீதா குமாரசிங்க, உயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்தார். இது தொடர்பில் கடந்த 12 ஆம் திக்தி மூவர் அடங்கிய நீதியர்சர்கள் குழு விசாரணை செய்த நிலையில், இன்று வரை மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தர்வு பிறப்பித்தது. இந் நிலையில் இந்த மனுவானது இன்று ஈவா வணசுந்தர, உபாலி அபேரத்ன மற்றும் அனில் குனரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன் போது, கீதா குமாரசிங்க சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் தமது சேவை பெறுனர் சுவிட்சர்லாந்து பிரஜையையே திருமணம் செய்துள்ளதாகவும் அதன் ஊடாகவே சுவிட்சர்லாந்து பிரஜா உரிமை அவருக்கு கிடைத்ததாகவும் அதனை அவர் விண்னப்பித்து பெறவில்லை எனவும் தானாக கிடைத்தது எனவும் தெரிவித்தனர். அத்துடன் பாராளுமன்ற விடயங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர்கள் அதனை மையப்படுத்தி மேன் முறையீட்டு மன்றின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

எனினும் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிற்றர் ஜெனரால் ஜனக டி சில்வா, எந்த வகையில் இரட்டை பிரஜா உரிமை கிடைத்திருப்பினும்  19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் எனக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து இந்த மேன் முறையீட்டு மனுவினை விசாரணை செய்து முடிக்கும் வரை மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை அமுல் செய்யக் கூடாது என்ற மனுதாரர் தரப்பின் கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.

இது தொடர்பில் வழக்கை விசாரணைச் செய்த நீதியரசர்களிடையே இரு கருத்துக்கள் நிலவின. வழக்கை விசாரணைச செய்து முடிக்கும் வரை மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை இடை நிறுத்த ஈவாகுவணசுந்தர, உபாலி அபேரத்ன ஆகிய நீதியர்சர்கள் தீர்மனித்த நிலையில் அனில் குணரத்ன மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை இடை நிறுத்துவதற்கு எதிராக தீர்மானித்தார். எனினும் பெரும்பான்மை அடிப்படையில் வழக்கு விசாரணை நிறைவுறும் வரை மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பானது இடை நிறுத்தப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது. இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

முன்னதாக காலி மாவட்ட வாக்காளர்களான கே.டப்ளியூ. புவனேக, ஜே.கே.அமரவர்தன உள்ளிட்ட நால்வர் 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உருப்பினராக பதவி வகிக்க முடியாது எனவும் அதனால் அவரது பாராளுமன்ற உருப்பினர் பதவியை ரத்து செய்யுமாறும் கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. கீதா குமாரசிங்க, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டு ரீட் மனுவொன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்த வழக்கு ஆரம்பத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த விடயமானது பாராளுமன்ற உள்ளக விவகாரம் என்பதால் பாராளுமன்ற அதிகாரம் மற்றும் வரப்பிரசாத சட்டத்தின் படி, அதனை விசாரிக்கும் அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை என கீதா குமாரசிங்கவின் சட்டத்தரணிகள் அடிப்படை ஆட்சேபனம் ஒன்றினை முன்வைத்தனர்.

எனினும் இந்த ஆட்சேபத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன் அதன் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் கொண்ட இருவர் முன்னிலையில் வழக்கை தொடர்ந்து விசாரணை செய்தது.

இந் நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மன்றில் தோன்றிய சட்ட மா அதிபரின் பிரதிநிதி, பிரதி சொலிசிற்ரர் ஜெனரால் ஜனக டி.சில்வா சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை மன்றுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி பிரதிவாதியான கீதா குமாரசிங்க கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் போதும், சுவிட்சர்லாந்து பிரஜா உரிமையைக் கொண்டிருந்துள்ளார். எனவே 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்ததின் பிரகாரம்  பாராளுமன்ற உருப்பினராக தெரிவு செய்யப்படவோ அல்லது அப்பதவியில் பதவி வகிக்கவோ  அவரால் முடியாது என சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிற்ரர் ஜெனரல் ஜனக டி. சில்வா தமது நிலைப்பாட்டை மன்றில் பதிவு செய்துள்ளார்.

இதனால் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்ற வரப் பிரசாதங்களுக்கு உட்பட்டவர் அல்ல எனவும் இரட்டை பிரஜா உரிமையுடன் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவது அரசியலமைப்பின் 91 (1) ஆம் சரத்துக்கு முரணானது எனவும் இதன் போது பிரதி சொலிசிற்ரர் ஜெனரல் ஜனக டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் பிரதிவாதி சுவிட்சர்லாந்து பிரஜா உரிமையை விட்டுக்கொடுத்து அதனை ரத்துச் செய்துவிட்டதாக கூறிய போதும் அதனை எழுத்து மூலம் முன்வைக்கவோ அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்பிக்கவோ அவரால் முடியவில்லை.

குறித்த ஆவணங்களை சமர்பிக்குமாறு சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய  குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஊடாக பிரதிவாதியான கீதா குமாரசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டும் அதனை சமர்ப்பிக்க அவர் தவறியுள்ளார்.  அதனால் இன்னொரு நாட்டின் பிரஜையாக இருப்பது சட்ட விரோதமானது எனவும் தேர்தல்கள் சட்டதை மீறும் செயல் எனவும் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிற்ரர் ஜெனரால் ஜனக டி சில்வா மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பிலான தீர்ப்பை கடந்த மூன்றாம் திகதி  மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொடவின் அனுமதியுடன் நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன  அறிவித்தார். இதன் போதே பிரதிவாதியான கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிபதி அறிவித்ததுடன் அவர் பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் பங்கேற்க அவருக்காக செலவு செய்யப்ப்ட்ட தொகையை மீள அறவிடவும் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்தே அந்த தீர்ப்புக்கு எதிராக கீத்தா குமாரசிங்க மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.