மல்வத்துபீடத்தை பிளவுபடுத்த மஹிந்த ராஜபக்ஷ சதி – பிரதமர் ரணில்

372 0

1இலங்கையில் பௌத்த உயர்பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடத்தை பிளவுபடுத்த மஹிந்த ராஜபக்ஷ சதி செய்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

ரம்புக்கணை, கடிகமுவ, நாகவிகாரையில் இன்று நடைபெற்ற வழிபாட்டு வைபவெமான்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் மல்வத்து பீடத்தை இரண்டாகப் பிளவுபடுத்தும் சதி நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தார்.

அவர் அதனை இல்லை என்று மறுக்கும் பட்சத்தில் அதுகுறித்த உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.

பௌத்த மதத்தின் உயர்பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடத்தை பிளவுபடுத்த மேற்கொண்ட சதி நடவடிக்கை மன்னிக்க முடியாத குற்றமாகும். இக்குற்றத்துக்காக மஹிந்தவின் குடியுரிமையை பறிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.

இவற்றைக் கருத்திற் கொண்டு புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு தரப்பையும் பிளவுபடுத்துவதற்கான சதித்திட்டங்களைத் தடுக்கும் சரத்துகளை உள்ளடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.