மோடி பெயரை குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரும் கௌரவம்

251 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனது பெயரை குறிப்பிட்டதை மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளுக்காக இலங்கைக்கு வந்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, மக்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், முத்தையா முரளிதரன், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களால் உலகுக்கு வழங்கப்பட்ட பரிசு என்று புகழ்ந்துரைத்தார்.

இதற்கு முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்,

தனது உரையின்போது எனது பெயரை அவர் (பிரதமர் மோடி) குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், எனது சொந்த நாட்டில் எனது பெயரையும், நான் சார்ந்த சமூகத்தின் அடையாளத்தையும் அவர் குறிப்பிட்டுப் பேசியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.

இந்தியாவுடன் எனக்கு மிகவும் நெருங்கிய உறவு உள்ளது. நான் தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன். எனது மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் தான். நாங்கள் அவர்களது 4 அல்லது 5வது தலைமுறையினர் ஆவோம்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மிகநெருங்கிய நட்புறவு நிலவுகிறது. இலங்கையின் மூத்த சகோதரனாக இந்தியா உள்ளது.

இலங்கைக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும் என்று நம்புகிறேன் என்றார் முத்தையா முரளிதரன்.