ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனையா?

237 0

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தப்படுமா? என்பது குறித்து வெங்கையா நாயுடு பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு பிரிவு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திறனாய்வு கூட்டம் சென்னை மயிலாப்பூரில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மந்திரி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை செயலாளர் அஞ்சு நிகம், அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குனர் ஜெனரல் சேஹரேயர், பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குனர் ஜெனரல் முத்து குமார் மற்றும் அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் வெங்கையா நாயுடு மரக்கன்று நட்டார்.

திறனாய்வு கூட்டத்துக்கு பின்னர் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திறனாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அனைவருக்கும் வீடு திட்டம், தூய்மை இந்தியா திட்டம் உள்பட பல்வேறு மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தான் தங்கள் மாநிலத்தின் துறைவாரியான திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசை அணுகி விவாதித்து வந்தனர்.

ஆனால் தற்போது அந்த நிலை மாறி, மத்திய அரசே, மாநில அரசை அணுகி திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வளர்ச்சி ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது. சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லுதல் என்ற 3 அம்சங்கள் மட்டுமே மத்திய அரசின் தாரக மந்திரம்.

மலிவான விலையில் அதிக பொதுமக்கள் பயன்அடைவார்கள் என்பதற்காக, தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் போட்டியான சூழலில், அகில இந்திய வானொலி நிலையமும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அதிநவீன கேமராக்கள் வாங்கப்படும். சமுதாய ரேடியோ மையம் அமைப்பதற்காக பல்கலைக்கழகங்கள், அரசு சாரா அமைப்புகளுக்கு மத்திய அரசு 75 சதவீதம் மானியம் வழங்கும். மத்திய அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் பிராந்திய மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ ஒலிபரப்பப்படுகிறது. உள்ளூர் செய்திகள் தொடர்பான விவரங்கள் அதிகரிக்கப்பட்டு, வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் பத்திரிகை தகவல் மைய இணையதளத்தில் தமிழ் மொழியில் செய்திகளை பார்க்கலாம்.

தூய்மை இந்தியா குறித்து மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக ஊழியர்களை கண்டித்து, கழிவறையை வருங்காலங்களில் சுத்தமாக பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். எனக்கு ஆடம்பர வசதிகளுடன் வரவேற்பு செய்வதை தவிர்த்துவிட்டு, மக்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் சேவைகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உடனான சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படுமா? என்று வெங்கையா நாயுடுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், “ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும்” என்றார்.